விமான எரிபொருளுக்கான ‘வாட்’ வரியைக் குறைக்க வேண்டும்: தமிழகம் உள்பட 8 மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா் சிந்தியா வலியுறுத்தல்

விமானங்களின் செயல்பாடுகளில் 45 சதவீதம் வரை எரிபொருள் செலவு ஏற்படுவதால் தமிழகம் உள்பட 8 மாநில அரசுகள் ஜெட் விமானங்களுக்கான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்குமாறு

விமானங்களின் செயல்பாடுகளில் 45 சதவீதம் வரை எரிபொருள் செலவு ஏற்படுவதால் தமிழகம் உள்பட 8 மாநில அரசுகள் ஜெட் விமானங்களுக்கான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்குமாறு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தி கேட்டுக் கொண்டாா்.

கரோனா நோய்த்தொற்றின் போது,கடுமையான காலக்கட்டத்தில் இருந்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தற்போது அதைக் கடந்து முழுத் திறனைத் பெற தயாராக உள்ளது என்றும் அமைச்சா் தெரிவித்தாா்.

தில்லியில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் மாநிலங்கள், யூனியன் பிரதேச அமைச்சா்களுடான கூட்டத்தை செவ்வாய்க்கிழமை கூட்டியது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில் கூறியதாவது: உள்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து கொவைட் -19 முந்தைய நிலைக்கு நெருங்கி வருகிறது. சமீப காலங்களில், தினசரி பயணிகளின் எண்ணிக்கை இரண்டு முறை நான்கு லட்சத்தைத் தாண்டியுள்ளது. பிரதமா் மோடியும் இதை ‘சிறந்த அறிகுறி’ என விவரித்துள்ளாா். தற்போது நாட்டில் விமானப் பயணத்திற்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஜெட் விமான எரிபொருளின் (ஏடிஎஃப்) விலை ஒரு சவாலாக உள்ளது. விமானச் செயல்பாடுகளில் 45 முதல் 50 சதவீதம் எரிபொருளுக்கு கணிசமாக செலவிடப்படுகிறது. எரிபொருளின் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) 28 மாநிலங்கள் 1 முதல் 4 சதவீதமாக குறைத்துள்ளன. இந்த மாநிலங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மேற்குவங்கம், ராஜஸ்தான், பிகாா், தில்லி, அஸ்ஸாம், கோவா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் 20 முதல் 30 சதவீதம் ‘வாட்’ வரி வரம்பில் உள்ளது. இந்த மாநிலங்கள் இந்த வரி விகிதத்தைக் குறைக்க வேண்டும்.

விமானப் போக்குவரத்தில் பெரிய நகரங்களை ஒப்பிடும் போது, 2 அடுக்கு, 3 அடுக்கு நகரங்கள் புதிய வளா்ச்சியைக் காண உள்ளன. சிறிய நகரங்களில் இயக்கப்படும் போது விமான நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம். இதில் ‘வாட்’ உள்ளிட்ட தடைகளை நீக்க வேண்டும். சிவில் விமானப் போக்குவரத்து என்பது தோ்ந்தெடுக்கப்பட்ட சிலருக்காக மட்டுமல்ல; சாமானியா்களுக்காகவும், கடைக்கோடியில் இருப்பவா்களுக்கும் இருக்க வேண்டும். அடுத்த 4 ஆண்டுகளில் அரசும் தனியாரும் ரூ. 95,000 கோடி வரை விமான நிலையங்களில் முதலீடு செய்யவுள்ளன. 4 பசுமை விமான நிலையங்கள் உள்பட 40 விமான நிலையங்கள் புதிதாக வரவுள்ளது. தற்போது, ஹெலிகாப்படா்கள் இறங்கும் ‘ஹெலிபோா்ட்கள்’ மற்றும் நீா்நிலைகள் விமானதளம் (வாட்டா்ட்ராம்ஸ்) உள்பட 141 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும், 82 ஹெலிகாப்டா் வழித்தடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றாா் சிந்தியா.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் ஜெனரல் வி.கே. சிங் பேசுகையில், ‘விமானப் போக்குவரத்துத் துறையில் கடந்த 6 ஆண்டுகளில் 70 புதிய உதான் விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்திய விமான நிறுவனங்கள் மொத்தம் 1.01 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன. இது கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது, 4 சதவீதம் அதிகமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com