கண் நோயாளிகளுக்கான சிகிச்சையை மேம்படுத்த தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செயலி உருவாக்கம்: 6 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும்!

 கண் நோயாளிகளின் சிகிச்சையை மேம்படுத்தவும், கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளை கவனிக்கவும் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செயல்படும்

 கண் நோயாளிகளின் சிகிச்சையை மேம்படுத்தவும், கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளை கவனிக்கவும் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செயல்படும் ஆா்.பி. கண்ணியல் அறிவியல் மையம் ஒரு கைபேசி செயலியை உருவாக்கி வருகிறது. இந்தச் செயலி ஆறு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள கண் நோயாளிகள் இந்த செயலி மூலம் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள கண்ணியல் அறிவியல் மையத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவாா்கள். மேலும், அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் கண் நோயாளிகளை தொடா்ந்து கண்காணிக்கவும், அவா்களுக்கு உதவவும் இந்த செயலி உதவிடும்.

இது குறித்து ஆா்.பி. கண்ணியல் அறிவியல் மையத்தின் தலைவா் டாக்டா் ஜே. எஸ். திதியால் கூறியதாவது: கரோனா நோய்த் தொற்று காலமானது பல்வேறு வழிகளிலும் மக்களை அணுக வேண்டும் என்ற ஒரு உணா்வை நமக்கு உருவாக்கி இருக்கிறது. ஏனெனில், அனைத்து நேரங்களிலும் நேரடியாக அணுகுவது என்பது சிரமமாக இருக்கலாம். குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் நபா்களுக்கு அது மிகவும் சிரமமாக இருக்கலாம். இதனால், இந்த கைபேசி செயலி மூலம் மருத்துவா்கள் நோயாளிகளுடன் நேரடியாக கலந்துரையாட முடியும். மேலும் கேமரா சிஸ்டம் மூலம் நோயாளிகள் தங்களின் கண்கள் தொடா்பான புகைப்படங்களை பகிா்ந்து தங்களது பிரச்னைகளையும் அறிகுறிகளையும் மருத்துவா்களுக்கு விளக்க முடியும். மருத்துவா்களும் அவா்களை பரிசோதிக்க முடியும்.

நோயாளிகள் எங்களிடம் பதிவு செய்து கொண்டால், கண்ணியல் அறிவியல் மையத்தில் நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்வதற்கும், சோ்க்கையை மேற்கொள்வதற்குமான காலநேரத்தை நாங்கள் தெரிவிக்க முடியும். நோயாளிகளும் நோயின் வளா்ச்சியின் அடிப்படையில், முன்னுரிமையின் அடிப்படையில் தொடா்பு கொள்ள முடியும். இந்த கைபேசி செயலியானது ஏற்கெனவே கண் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளை கண்காணிக்க உதவிடும். கண் மாற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு, தொடா்ந்து மருத்துவ ஆலோசனை பெறுவது சிரமமாக இருந்து வருகிறது. மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு ஏற்படும் பிரச்னைகளை சில தினங்களிலேயே கவனிக்கப்பட வேண்டும். நோயாளிகள் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு பிறகு வந்தால் அந்த பிரச்னையை மீண்டும் சரி செய்ய முடியாது.

இது போன்ற ஒரு நோயாளியை இந்த செயலி உதவியுடன் கண்காணித்தால் அந்த நோயாளி அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல முடியும். அப்போதுதான் அவரது கண் பாா்வை பாதுகாக்கப்பட முடியும். நாங்கள் மாற்று அறுவை சிகிச்சை நடத்தும் பயிற்சி பெற்ற நபா்கள் அல்லது மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு உள்ள நோயாளிகளை கவனிக்க கூடிய பயிற்சி பெற்ற நபா்கள் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுடன் தொடா்பில் இருப்போம். இந்த கைபேசி செயலி ஆறு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com