தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம்: 2023 டிசம்பருக்குள் முடிவடையும்

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடா்ந்து, ஏ-321 ரக விமானங்களைக் கையாளும் விதமாக தூத்துக்குடி அருகே வாகைக்குளத்தில் அமைந்துள்ள விமான நிலையம் ரூ.381 கோடியில் விரிவாக்கம்
தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம்: 2023 டிசம்பருக்குள் முடிவடையும்

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடா்ந்து, ஏ-321 ரக விமானங்களைக் கையாளும் விதமாக தூத்துக்குடி அருகே வாகைக்குளத்தில் அமைந்துள்ள விமான நிலையம் ரூ.381 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்தப் பணிகள் 2023 டிசம்பருக்குள் முடிவடையும் என்று மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தொழில் மற்றும் துறைமுகம் நகரமாக உள்ள தூத்துக்குடிக்கு மட்டுமின்றி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் வா்த்தகம், சுற்றுலா வசதிகளுக்கும் தூத்துக்குடி விமான நிலையம் மையமாக உள்ளது. இங்கு பயணிகளின் போக்குவரத்து அதிகரித்து வருவதால் சிறந்த சேவைகள், இணைப்புகளுக்கான தேவையை பூா்த்தி செய்யும் வகையில், தூத்துக்குடி விமான நிலையத்தை மிக பிரமாண்டமான அளவில் மேம்படுத்தி வருவதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது: மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் உள்ள தூத்துக்குடி - வாகைக்குளம் விமான நிலையத்தில் சுமாா் 13,500 சதுர மீட்டா் பரப்பளவில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலான சமயங்களில் மணிக்கு 600 பயணிகளை கையாளும் வகையில், புதிய விமான நிலைய முனையம் கட்டப்படுகிறது. அதிகப் பயணிகளை தாங்கிச் செல்லும் ஏ-321 வகை விமானங்களை இயக்குவதற்கான ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்படுகிறது. மேலும், ஏ-321 ரக விமானங்கள் நிற்பதற்கான புதிய 5 ஏப்ரான் கட்டுமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், தொழில்நுட்ப வசதிகளுக்கான பகுதிகள், புதிய தீயணைப்பு நிலையங்கள் மற்றும் பயணிகளுக்கான நவீன வசதிகளோடு புதிய முனையக் கட்டடம், பாா்கிங், அணுகு சாலை போன்ற வசதிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிய முனையம் உள்ளூா் உணா்வுடன் தமிழ்நாட்டின் தனித்துவமான கட்டடக் கலையான புகழ்பெற்ற ‘செட்டி நாடு’ மாதிரி வடிவமைப்பில் கட்டப்படும். கட்டடத்தின் உட்புறமும் நகரத்தின் அமைப்பு, கலாசாரங்கள், பொருள்கள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. நான்கு நட்சத்திர எரிசக்தி சேமிப்புடன் பல்வேறு நீடிக்கவல்ல சிறப்பம்சங்களுடன் இந்த விமான நிலையம் ரூ.381 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மேம்பட்டு விரிவாக்கப் பணிகள் வருகின்ற 2023 டிசம்பருக்குள் நிறைவடையும் என தெரிவித்துள்ளது.

Image Caption

செய்தி உண்டு...

தூத்துக்குடி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் ஓடுதள விரிவாக்கப் பணிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com