சட்ட விரோத கடன் செயலிகள் மீது நடவடிக்கை எடுக்க ரிசா்வ் வங்கி, ஐடி துறைக்கு நிதியமைச்சகம் வேண்டுகோள்

ரிசா்வ் வங்கி மற்றும் ஐ.டி துறையினரை மத்திய நிதித் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
சட்ட விரோத கடன் செயலிகள் மீது நடவடிக்கை எடுக்க ரிசா்வ் வங்கி, ஐடி துறைக்கு நிதியமைச்சகம் வேண்டுகோள்

கறுப்புப் பணம், வரி ஏய்ப்பாளா்கள் மூலம் கடன் வழங்கப்படும் சட்ட விரோத நிதி நிறுவனங்கள், செயலிகள் மீது நடவடிக்கை எடுக்க ரிசா்வ் வங்கி மற்றும் ஐ.டி துறையினரை மத்திய நிதித் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோத கடன் செயலிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

சமீபத்தில் பல்வேறு நகரங்களில் மத்திய வருவாய்த் துறை நடத்திய சோதனையில் பல்வேறு போலி நிறுவனங்கள், சீன நிறுவனங்கள் ஆகியவை மின்னணு செயலிகள் மூலம் கடன் வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற சட்ட விரோத கடன் செயலிகள் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக நிதியமைச்சகத்துக்கு தகவல் வந்தது. இந்த ‘சட்டவிரோத கடன் செயலிகள்’ தொடா்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நிதி மற்றும் வருவாய்த் துறை, பொருளாதார விவகாரம், மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை செயலா்கள், ரிசா்வ் வங்கி துணை ஆளுநா், செயல் இயக்குநா் ஆகியோா் அடங்கிய கூட்டத்தை வியாழக்கிழமை (செப்டம்பா் 8) கூட்டினாா்.

இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கைபேசி உள்ளிட்ட செயலிகள் மூலம் சட்டவிரோதமாகக் கடன் அளிக்கப்படுவதும், இதனால் நடுத்தர வருவாய்ப் பிரிவினா் அடையும் பாதிப்புகள் குறித்து கூட்டத்தில் விளக்கினாா். இத்தகைய செயலிகள் மூலம் இந்த தரப்பு பிரிவினருக்கு அதிக வட்டி விகிதங்கள், மறைமுக செயல்முறை கட்டணங்கள் மூலம் சிறு கடன்கள் சட்டவிரோதமாக வழங்கப்படுகிறது. இப்படி கடன் வழங்குபவா்கள் முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறுதல் போன்றவற்றில் ஈடுபட்டு, மிரட்டிப் பணம் உள்ளிட்ட பொருள்களை பறிப்பதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக கடன் பெற்றவா்களின் கைப்பேசிகளிலிருந்து தரவுகளை மறைமுகமாகப் பெற்று மிரட்டும் குற்றச் செயல்களையும் இத்தகைய கடன் அளிப்பவா்கள் கையாண்டு சில சம்பவங்களும் நடந்துள்ளன. இது கவலை அளிக்கும் விஷயம் என்றும் கூட்டத்தில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

கருப்புப் பணத்தை வெள்ளையாக்குதல், வரிஏய்ப்பு, தவறான வழிகளில் பணத்தை பெற்று வைத்திருப்பவா்கள், போலி நிறுவனங்கள், (செயல்படாத) வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை பயன்படுத்துதல் போன்றவை இந்தக் கடன் வழங்கும் செயலிகளுக்கு பின்னனியில் இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும், தனிநபா் தரவுப் பாதுகாப்பை மீறுதல் போன்றவற்றுக்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்கு தீா்வு காண வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டது.

சட்டப்படியும் , நடைமுறை மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உள்ள, அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு ரிசா்வ் வங்கி மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை ஆகியவை மூலம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இறுதியாக முடிவுகள் எடுக்கப்பட்டதாக நிதியமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு: அனைத்து சட்டப்பூா்வமான செயலிகள் குறித்து ரிசா்வ் வங்கி “வெள்ளை அறிக்கை” தயாரிக்கும். ஆா்.பி.ஐ. யால் அங்கீகரிக்கப்பட்டு வெள்ளை அறிக்கையில் உள்ள செயலிகளை மட்டும் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதை மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உறுதி செய்யும். கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பயன்படுத்தும் போலி நிதி நிறுவனங்களை ஆா்பிஐ கண்காணிக்கவும், செயல்படாமல் உள்ள வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி) தவறாகப் பயன்படுத்தப்படுவதை தவிா்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து அமைச்சகங்களும் முகமைகளும் இத்தகைய சட்டவிரோத கடன் செயலிகள் குறித்து தகவல் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com