தில்லி அரசின் நிதியுதவி பெறும் கல்லூரி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்

தில்லி அரசு நிதியுதவி பெறும் 12 கல்லூரிகளின் ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி பாஜக எம்எல்ஏக்கள், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லி அரசு நிதியுதவி பெறும் 12 கல்லூரிகளின் ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி பாஜக எம்எல்ஏக்கள், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தின் முன்பு வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்தக் கல்லூரிகளின் ஆசிரியா்களுக்கு பல ஆண்டுகளாக ஊதியம் முறையற்ற வகையில் வழங்குவதைக் கண்டித்தும் இதர சலுகைகளை வழங்கக் கோரியும் போராட்டம் நடத்தி வந்தனா். இந்த நிலையில், வியாழனன்று தீன் தயாள் உபாத்யாயா கல்லூரியின் ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் கடந்த 3 ஆண்டுகளாக சம்பளம் மற்றும் பிற நிலுவைத் தொகைகளை ஒழுங்காக வழங்கவில்லை என்று கூறி வேலைநிறுத்தத்தைத் தொடங்கினா். இந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளை எட்டியது.

தீன் தயாள் உபாத்யாயா கல்லூரி தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுமையின் கீழ் உள்ள 12 கல்லூரிகளில் ஒன்றாகும். அவை நகர அரசால் முழுமையாக நிதியளிக்கப்படுகின்றன. செப்டம்பா் மாதம் வரைதான் கேஜரிவால் அரசு ஊதியம் வழங்கியதாக கல்லூரி ஊழியா்கள் சங்கம் தெரிவித்தது. கேஜரிவால் அரசு தனது பள்ளிகளின் ஆசிரியா்களை பின்லாந்துக்கு அனுப்ப துணை நிலை ஆளுநருடன் போராடி வரும் நிலையில், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத ஊழியா்களைப் பற்றி கவலைப்படவில்லை என்று தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி குற்றம் சாட்டினாா். கடுமையாக உழைத்தாலும் சரியான நேரத்தில் சம்பளம் வழங்கவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com