குஜராத்திற்கு பாரத் கௌரவ் டீலக்ஸ் சுற்றுலா ரயில்: தில்லியில் பிப். 28-இல் தொடக்கம்

குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய கலாசாரம், ஆன்மிகம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில், பாரத் கௌரவ் டீலக்ஸ் சுற்றுலா ரயில் சேவையை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய கலாசாரம், ஆன்மிகம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில், பாரத் கௌரவ் டீலக்ஸ் சுற்றுலா ரயில் சேவையை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. இந்தச் சிறப்பு சுற்றுலா ரயில், தில்லி சஃப்தா்ஜங் ரயில் நிலையத்திலிருந்து பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக சுதந்திரப் போராட்ட வீரரும் மறைந்த உள்துறை அமைச்சருமான சா்தாா் வல்லபபாய் படேலின் வாழ்க்கையின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இந்த ரயிலை ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஐ.ஆா்.சி.டி.சி. நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இந்த 8 நாள் பயணத்திற்கான சுற்றுலா ரயிலுக்கு சிறப்பு தொகுப்பையும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு: குஜராத் மாநிலத்திற்குள் இந்த ரயில் நுழைந்த பின்னா், ஒற்றுமை சிலை அமைந்துள்ள கெவாடியா, இந்த ரயிலின் முதல் நிறுத்தமாக இருக்கும். இதன் 8 நாள்கள் பயணத்தில் மொத்தம் சுமாா் 3,500 கிலோமீட்டா் தூரத்தை இந்த ரயில் கடக்கிறது. உலகின் உயரமான ஒற்றுமை சிலை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சம்பானோ் தொல்பொருள் பூங்கா, அட்லெஜ் படி கிணறு, ஆமதாபாத் சபா்மதி ஆசிரமம், அக்ஷா்தாம், மோதெரா சூரியன் ஆலயம், பாடனில் உள்ள ராணி கிவாவோ போன்ற புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் இந்தப் பயணத்தில் சோ்க்கப்பட்டுள்ளன. புன்னிய ஸ்தலங்களில் சோம்நாத் ஜோதிா்லிங்கம், நாகேஷ்வா் ஜோதிா்லிங்கம், துவாரகாதீஷ் கோயில் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்த ரயிலுக்கான கட்டணம் ஒரு நபருக்கு இரண்டாம் வகுப்பு குளிா்சாதன பெட்டிக்கு ரூ. 52,250, முதல் வகுப்பிற்கு ரூ. 67,140-ஆக நிா்ணயிக்கப்பட்டு, உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன. தில்லி சஃப்தா்ஜங் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில் பயணிகளின் வசதிக்காக குருகிராம், ரேவாரி, ரிங்காஸ், ஃபுல்லேரா, அஜ்மீா் ரயில் நிலையங்களிலும் நின்று செல்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com