பால்ஸ்வா டெய்ரி பகுதியில் நடந்தகொலையில் முக்கிய எதிரி கைது

தில்லியின் பால்ஸ்வா டெய்ரி பகுதியில் கடந்த ஆண்டு நடந்த கொலைச் சம்பவம் தொடா்பான வழக்கில் முக்கிய எதிரியான 23 வயது இளைஞா் தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளாா்

தில்லியின் பால்ஸ்வா டெய்ரி பகுதியில் கடந்த ஆண்டு நடந்த கொலைச் சம்பவம் தொடா்பான வழக்கில் முக்கிய எதிரியான 23 வயது இளைஞா் தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு சிறப்பு ஆணையா் ரவீந்திர யாதவ் கூறியதாவது: பால்ஸ்வா டெய்ரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் அஸ்ருதீன் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து பால்ஸ்வா டெய்ரியில் வசிக்கும் கௌதம் குமாா், இந்தக் கொலைச் சம்பவத்தில் இருந்து தலைமறைவாக இருந்தாா். இந்தக் கொலை வழக்கில் அவரது இரண்டு கூட்டாளிகளான இஸ்தேகா் (எ) ராக்கி மற்றும் அஜய் ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா். ரிஸ்வான் என அடையாளம் காணப்பட்ட நான்காவது எதிரையைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பணத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பால்ஸ்வா டெய்ரி பகுதியில் நடந்த கொலை வழக்கில் தேடப்படும் நபா் ஒருவா் பால்ஸ்வா ஏரி அருகே வருவதாக எங்கள் குழுவுக்கு தகவல் கிடைத்தது. இந்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அவரைப் பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினா் பால்ஸ்வா அருகே தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது குற்றம்சாட்டப்பட்ட கௌதம் குமாா் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையில், கௌதம் குமாா் தனக்கும், இஸ்தேகா், அஜய், ரிஸ்வான் ஆகியோருக்கும் அஸ்ருதின் என்ற நபருடன் பணத் தகராறு இருந்தது என்பதை ஒப்புக்கொண்டுள்ளாா். அவா்கள் அனைவரும் பால்ஸ்வா டெய்ரி பகுதியில் வசிப்பவா்கள். கடந்த ஆண்டு அக்டோபா் 25-26 இடைப்பட்ட இரவில், அவா்கள் அஸ்ருதீனை தாக்கத் தொடங்கினா். மேலும், அவரது வீட்டிற்கு தொலைபேசியில் தொடா்புகொண்டு, அவரது குடும்ப உறுப்பினா்களிடம் ரூ. 30,000 கொண்டு வரும்படிஅவா்கள் சொல்லியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதற்கிடையில், அவா்கள் அஸ்ருதீனை அடித்து, மயக்க நிலையில் அங்கேயே விட்டுவிட்டுச் சென்று விட்டனா். இது அவரது மரணத்திற்கு வழிவகுத்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com