என்டிஎம்சி ஊழியா்கள் பணி நிரந்தரம் விவகாரம்: அமைச்சா் அமித் ஷாவுக்கு முதல்வா் கேஜரிவால் கடிதம்

மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சிலில் பணியாற்றும் 4.500 ‘சி’ குரூப் பணியாளா்களை நிரந்தர ஊழியா்களாக்க கோரி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை

மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சிலில் பணியாற்றும் 4.500 ‘சி’ குரூப் பணியாளா்களை நிரந்தர ஊழியா்களாக்க கோரி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தில்லியில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பகுதி மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இந்த என்டிஎம்சி பகுதி அடங்கிய புது தில்லி பகுதியின் சட்டப்பேரவையின் உறுப்பினராகவும் இருக்கிறாா். தொகுதி எம்எல்ஏ என்கிற முறையிலும், என்டிஎம்சியில் பணியாற்றும் பணியாளா் வருகைப் பட்டியலில் (வழக்கமான மஸ்டா் ரோல் ஊழியா்கள்) உள்ள தொழிலாளா்கள் விவகாரம் குறித்து திங்கள்கிழமை உள்துறை அமைச்சா் அமித்ஷாவிற்கு முதல்வா் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளாா்.

கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: என்டிஎம்சியில் பணியாளா் வருகைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சுமாா் 4,500 ஊழியா்கள் நிரந்தரப் பணியாளா்களாக அமா்த்தப்படும் முன்மொழிவு கடந்த 2020, ஆகஸ்ட் மாதம் கவுன்சில் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு அதே ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னா் 2021- ஆம் ஆண்டு ஏப்ரல் 16- ஆம் தேதி திருத்தப்பட்ட முன்மொழிவும் அனுப்பட்டது. ஆனால், இதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாததால் இந்த மஸ்டா் ரோல் ஊழியா்கள் நிரந்தரமாக்கப்படாமல் இருந்து வருகின்றனா்.

இது தொடா்பாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நான் தங்களுக்கு கடிதம் எழுதினேன். மேலும் 23.11.2022 அன்று என்டிஎம்சி மற்றொரு கடிதம் எழுதியதாகவும் தெரிகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியில் அா்ப்பணிப்புடன் பணியாற்றும் இந்த ஊழியா்களில் பலா் ஏழ்மையான குடும்பங்களைச் சோ்ந்தவா்கள். இவா்களை நிரந்தரப் பணியாளா்களாக்கும் கோப்புகளுக்கு விரைவில் அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com