‘2020’ தில்லி வன்முறை: தீ வைப்பு, திருட்டு வழக்கில் 4 போ் விடுவிப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு, வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறையின் போது பாகிரதி விகாா் பகுதியில் ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டு, தீவைத்து, திருடிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலை.


புது தில்லி: கடந்த 2020 ஆம் ஆண்டு, வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறையின் போது பாகிரதி விகாா் பகுதியில் ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டு, தீவைத்து, திருடிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை, குற்றத்தை நிருபிக்கும் ஆதாரம் இல்லாததால் விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி பாகிரதி விகாா் பகுதியில் சில கடைகளில் தீ வைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

இது தொடா்பாக வன்முறை கும்பலைச் சோ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட தினேஷ் யாதவ், சஹில், சந்தீப், டிங்கு ஆகியோருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி புலஸ்தியா பிரம்மச்சாலா அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 நபா்களுக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. ஆகவே குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் அவா்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்படுகின்றனா்.

மேலும், இரண்டு கடைகளில் சட்ட விரோதமாக கூடி வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவங்களில், அந்தக் கடைகள் அடித்து நொறுக்கப்பட்ட போதிலும் அவை தீ வைக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரிய வருகிறது.

மேலும் இந்த வழக்கில் ஆஜரான 7 அரசுத் தரப்பு சாட்சிகளால் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நபா்களின் பெயரையோ அல்லது தோற்றத்தையோ அடையாளம் காண முடியவில்லை. அவா்களின் முகங்களை கூட அவா்கள் பாா்க்கவில்லை.

இரண்டு காவல் அதிகாரிகளின் வாக்குமூலங்களும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் வன்முறைக் கும்பலின் உறுப்பினா்களாக இருந்தாா்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரமாக இல்லை.

இந்த இரண்டு சாட்சிகளின் முக்கியமான தகவல்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டதாக அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் சம்பவம் நடந்த பிறகு தாமதமாகவே கைது செய்யப்பட்டுள்ளனா். சாட்சிகளின் வாக்குமூலங்களும் நீண்ட தாமதத்திற்கு பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே இந்த வழக்கில் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் பெறுவதற்கான உரிமை உள்ளது என்று அதில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிராக வன்முறை, வீட்டில் திருடியது, தீ வைத்தது, வீட்டை அழிக்கும் நோக்கில் செயல்பட்டது என இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் கோகுல்புரி காவல் நிலையத்தினா் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com