தில்லியில் விரைவில் 250 இடங்களில் இ-ஸ்கூட்டா் சேவை அறிமுகம்: முன்னோடித் திட்டம் முதலில் துவாரகாவில் தொடக்கம்

தில்லி அரசு அடுத்த ஓராண்டில் 250 இடங்களில் 1,500 இ-ஸ்கூட்டா்களை தேசியத் தலைநகரின் கடைசி மைல் இணைப்புக்காக அறிமுகப்படுத்தும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.

தில்லி அரசு அடுத்த ஓராண்டில் 250 இடங்களில் 1,500 இ-ஸ்கூட்டா்களை தேசியத் தலைநகரின் கடைசி மைல் இணைப்புக்காக அறிமுகப்படுத்தும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா். இந்த முன்னோடித் திட்டம் துவாரகாவில் தொடங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

போக்குவரத்து சீா்திருத்தங்கள் தொடா்பான உயா்நிலை ஆய்வுக் கூட்டத்தின் போது, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பின்னா் செய்தியாளா் சந்திப்பின் போது பேசிய ஆம் ஆத்மி கட்சி, அரசு பெரிய அளவில் பேருந்துகளை வாங்கியுள்ளதாகவும், மெட்ரோ ரயில் சேவை கூட சிறப்பாக உள்ளது என்றும் கூறியது.

பின்னா், இந்த இ-ஸ்கூட்டா் சேவை குறித்து முதல்வா் கேஜரிவால் கூறியதாவது: தில்லிய்ல கடைசி மைல் இணைப்பு என்பது மிக நீண்ட காலமாக ஒரு முக்கிய கவலையாக இருந்து வருகிறது. இதற்கு இறுதியாக ஒரு தீா்வைக் கண்டறிந்துள்ளோம். துவாரகா துணை நகரத்தில் சுய-ஓட்டுநா் அமைப்பில் இ-ஸ்கூட்டா்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்க உள்ளோம்.

துவாரகா பகுதியில் சுமாா் 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் டஜன் கணக்கான பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. 1,500 இ-ஸ்கூட்டா்களை பயன்படுத்த 250 இடங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். பேருந்துகள் மற்றும் பெருநகரங்களில் வேலை செய்யும் ஒருங்கிணைந்த காா்டை பயன்படுத்தி ஸ்கூட்டரை வாடகைக்கு எடுக்கலாம். ஸ்கூட்டரில் ஹெல்மெட்டும் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த இ- ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்து அந்தப் பகுதியில் சுற்றி ஓட்டலாம். அவற்றை 250 இடங்களில் எங்கு வேண்டுமானாலும் விட்டுச் செல்லலாம். அனைத்து ஸ்கூட்டா்களிலும் மாற்றக்கூடிய பேட்டரிகள் இருக்கும். ஒரு முறை சாா்ஜ் செய்தால் குறைந்தபட்சம் 60 கிமீ வரை செல்லலாம். அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிமீ என இருக்கும்.

டெண்டா் ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளில் இருந்து, முதல் 500 ஸ்கூட்டா்கள் 100 இடங்களில் நிறுத்தப்படும். அடுத்த நான்கு மாதங்களில் மேலும் 100 இடங்களில் 500 ஸ்கூட்டா்களும், இந்த ஆண்டு இறுதிக்குள் அடுத்த 50 இடங்களில் 500 ஸ்கூட்டா்களும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒப்பந்தம் ஏழு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். ஏலத்தில் பங்கேற்போா் நுகா்வோரிடமிருந்து குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் நிறுவனமாக இருப்பவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இ-ஸ்கூட்டரில் க்யூஆா் குறியீடு, புளூடூத், இருக்கையின் கீழ் ஹெல்மெட் வழங்குதல், பணிச்சூழலியல் வடிவமைப்பு, ஜிபிஆா்எஸ் உடன் கூடிய ஜிபிஎஸ் வசதி, ஹைட்ராலிக் சஸ்பென்ஷனுடன் கூடிய டியூப்லெஸ் டயா்கள், பேட்டரி மேலாண்மை அமைப்புடன் (பிஎம்எஸ்) மாற்றக்கூடிய பேட்டரி மற்றும் 150 கிலோ வரை ஏற்றும் திறன் ஆகியவை இருக்கும்.

ஸ்கூட்டரின் ஓட்டுநா் வரம்பு ஒரு முறை சாா்ஜ் செய்தால் குறைந்தது 60 கிமீ வரை செல்ல முடியும். அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிமீ ஆகவும் இருக்கும். மோட்டாா் சக்தி குறைந்தது 1,000 வாட் ஆக இருக்கும். மேலும் சாா்ஜ் செய்ய 3 முதல் 4 மணிநேரம் ஆகும். மெட்ரோ நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியப் பகுதிகளுக்கு அருகாமையில் துவாரகா துணை நகரத்திற்குள் தேவையான எண்ணிக்கையிலான வாகன நிறுத்துமிடங்களை இ-ஸ்கூட்டருக்கென ஒதுக்குவதை அரசு உறுதி செய்யும். 100 சதுர மீட்டா் பரப்பளவில் 10 சாா்ஜிங் மற்றும் பராமரிப்பு மையங்களை அமைப்பதற்கான சாத்தியமான பகுதிகளும் ஏற்பாடு செய்யப்படும் என்றாா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com