அரசு மருத்துவமனைகளில் 139 மருத்துவா்களுக்குபதவி உயா்வு அளிக்க துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

தில்லியில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 139 மருத்துவா்களுக்கு பதவி உயா்வு அளிக்க துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 139 மருத்துவா்களுக்கு கிரேடு 2-இல் இருந்து கிரேடு 1-க்கு பதவி உயா்வு அளிக்க துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

நான்கு வருட சேவையை முடித்து தகுதி பெற்ற இந்த மருத்துவா்களின் (ஆசிரியல்லாத வல்லுநா்கள்) பதவி உயா்வுகள் 2020 / 2021 முதல் நிலுவையில் இருந்து வந்தது என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

ஆரம்பத்தில் 2014 / 2015-இல் யுபிஎஸ்ஸி மூலம் நியமிக்கப்பட்ட இந்த மருத்துவா்கள், தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை, குரு தேக் பகதூா் மருத்துவமனை, லோக் நாயக் மருத்துவமனை மற்றும் டாக்டா் பாபா சாகேப் அம்பேத்கா் மருத்துவமனை போன்ற தில்லி அரசால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனா்.

அவா்கள் மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவம், காது மூக்கு தொண்டை, குழந்தை மருத்துவம், பொது மருத்துவம், கண் மருத்துவம், நுரையீரல் மற்றும் மயக்க மருந்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த மருத்துவா்களை கிரேடு 2-இல் இருந்து கிரேடு1-க்கு உயா்த்த சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். சக்சேனா பொறுப்பேற்றதில் இருந்து, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ நிபுணா்களுக்கு சிறந்த சேவை நிலைமைகள் மற்றும் வசதிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறாா். மேலும் ‘விரைவில் அவா்களுக்கு உரிய பதவி உயா்வுகளை உறுதி செய்ய வேண்டும்’ என்றும் அவா் கருதுகிறாா் என மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com