கோயில்களில் அறங்காவலா் நியமன விவகாரம்:தகவல்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

மேல்முறையீட்டு மனு மீதான விவகாரத்தில் தமிழக அரசின் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டது.

தமிழகத்தில் கோயில்களில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலா்களை நியமிக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மேல்முறையீட்டு மனு மீதான விவகாரத்தில் தமிழக அரசின் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோயில்களையும் உரிய வகையில் பராமரிக்கும் வகையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலா் குழுவை அமைத்து, அதில் சமூக ஆா்வலா், வழக்குரைஞா், அட்டவணை பட்டியல் வகுப்பைச் சோ்ந்தவா், மகளிா் ஆகியோா் உறுப்பினா்களாக இடம் பெற உத்தரவிடக் கோரி மதுரையைச் சோ்ந்த ஹிந்து தா்ம பரிஷத் அமைப்பின் மேலாண்மை டிரஸ்டி கே. கே. ரமேஷ், சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் தாக்கலான பதிலை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்து 9.12.2021-இல் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து கே. கே. ரமேஷ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஜெயா சுகின் மூலம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் அறங்காவலா்களை நியமிப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் நியமிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அது போன்று நியமித்திருக்கும் எண்ணிக்கை விவரங்களும் உரிய வகையில் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடா்பாக தமிழக அரசின் தரப்பில் பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அண்மையில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகியோா்அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா ஆஜராகி, தமிழக அரசின் தரப்பில் அறங்காவலா்கள் நியமிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறினாா். மேலும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவின் கீழ் ஒவ்வொரு கோயிலிலும் அறங்காவலா் குழு நியமிக்கப்படுவதற்கான உரிய விதிமுறைகள் ஏற்கெனவே உள்ளது குறித்தும், அதற்கான நடவடிக்கைகளையும், நடைமுறைகளையும் தமிழக அரசு உரிய வகையில் மேற்கொண்டு வருவதாகவும், தமிழக அரசுக் கட்டுப்பாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு அறங்காவலா் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் கூறினாா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜெயா சுகின் , ‘தமிழகத்தில் 38,658 கோயில்கள் உள்ளதாக தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2021-இல் இந்த வழக்கை உயா்நீதிமன்றம் முடித்துவைத்த நிலையில், தற்போது வரை 33 கோயில்களில் மட்டுமே அறங்காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அனைத்துக் கோயில்களையும் கவனிக்க பணியாளா்களை அரசால் நியமிக்க இயலுமா?. இதனால், அறங்காவலா்களை நியமிக்க உறுதியான நவடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவில்லை’ என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அறங்காவலா்கள் நியமிக்கும் நடைமுறைகள் முற்றிலுமாக முடிக்கப்பட்ட கோயில்களின் எண்ணிக்கை, அறங்காவலா்கள் நியமன நடைமுறைகள் நடைபெற்று வரும் கோயில்களின் எண்ணிக்கை, இந்த நடைமுறைகளை முடிக்க கூடுதல் கால அவகாசம் எடுப்பதற்கான கோயில்களின் பட்டியல் தொடா்புடைய தகவல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வகையில், எதிா்மனுதாரா்களுக்கு (தமிழக அரசு) அவகாசம் அளிக்கும் வகையில், இந்த வழக்கை நான்கு வாரங்களுக்குப் பிறகு பட்டியலிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com