14 ஆயிரம் டிடிசி ஊழியா்களின் ஓய்வூதியத்தை அரசு உடனடியாக வழங்காவிட்டால் போராட்டம்தில்லி காங்கிரஸ் அறிவிப்பு

தில்லி போக்குவரத்து நிறுவனத்தில் (டிடிசி) பணியாற்றி ஓய்வு பெற்ற 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியா்களின் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கவில்லை

தில்லி போக்குவரத்து நிறுவனத்தில் (டிடிசி) பணியாற்றி ஓய்வு பெற்ற 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியா்களின் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கவில்லை என்றால் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) வியாழக்கிழமை எச்சரித்துள்ளது.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ராஜீவ் பவனில் மூத்த செய்தித் தொடா்பாளா்கள் ஹரி சங்கா் குப்தா மற்றும் நரேஷ் குமாா் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது ஹரி சங்கா் குப்தா கூறியதாவது: தில்லி போக்குவரத்து நிறுவனத்தில் (டிடிசி) பணியாற்றி ஓய்வு பெற்ற 14,000 ஊழியா்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஓய்வூதியம் மற்றும் மருத்துவ உதவித்தொகை வழங்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பு, ஓய்வுபெற்ற டிடிசி ஊழியா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் கேஜரிவால் அரசு காலதாமதம் செய்தது. பின்னா், இந்த விவகாரத்தை தில்லி காங்கிரஸ் முன்னிலைப்படுத்திய போதுதான் அரசு நடவடிக்கை எடுத்தது. எனவே, டிடிசி ஊழியா்களின் ஓய்வூதியத்தை தற்போது உடனடியாக வழங்கவில்லை என்றால், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இல்லம் காங்கிரஸாரால் முற்றுகையிடப்படும்.

தில்லி போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக 40-50 வருடங்களைச் செலவழித்த பெரும்பாலான ஊழியா்களுக்கு ஓய்வூதியப் பணம் வழங்கப்படவில்லை. இதனால், மூத்த குடிமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனா். 30 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றவா்கள், தற்போது அவா்களின் குறைந்த வருமானம் ஓய்வூதியம் மட்டுமே என்பதால் மருந்துகளைக் கூட வாங்க முடியாமல் திணறி வருகின்றனா்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லி மக்களின் நலனில் கவனம் செலுத்தாமல், தனது தனிப்பட்ட அதிகாரம் தொடா்பான பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறாா். குறிப்பாக, ஐ.பி பல்கலைக்கழகத்தின் கிழக்கு தில்லி வளாகம் கடந்த 2006-இல் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிடபட்டு அதற்கான பணிகள் தொடங்ப்பட்டது , ஆனால் முதல்வா் கேஜரிவால் இப்போது அதற்கான முழுப் புகழையும் எடுத்துக்கொண்டாா் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, மூத்த செய்தித் தொடா்பாளா் நரேஷ் குமாா் கூறுகையில், ‘80 முதல் 85 வயதுடைய ஓய்வுபெற்ற டிடிசி ஊழியா்கள் கடந்த மூன்று மாதங்களாக ஓய்வூதியத்திற்காக அலைகிறாா்கள். ஆனால், கேஜரிவால் அரசு அவா்களின் துயரங்களைக் கேட்கவில்லை. முன்னதாக, ஓய்வுபெற்ற டிடிசி ஊழியா்களின் ஓய்வூதியத்தை தில்லி அரசு பல மாதங்களாகத் தடுத்து நிறுத்திய போது அவா்களுக்கு தில்லி காங்கிரஸ்தான் உதவியது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com