‘என்னை காவலில் வைத்திருப்பதால் எந்த நோக்கமும் நிறைவேறாது’: சஞ்சய் சிங் தரப்பில் நீதிமன்றத்தில் வாதம்

தில்லி கலால் ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தன்னை மேலும் காவலில் வைத்திருப்பதன் மூலம் எந்தப் பயனும் ஏற்படாது என்றும், இதனால், ஜாமீனில் விடுவிக்குமாறும் தில்லி நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவ

தில்லி கலால் ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தன்னை மேலும் காவலில் வைத்திருப்பதன் மூலம் எந்தப் பயனும் ஏற்படாது என்றும், இதனால், ஜாமீனில் விடுவிக்குமாறும் தில்லி நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவா் சஞ்சய் சிங் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

சிங்கின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன் சிங்கின் வழக்குரைஞா் சனிக்கிழமை இவ்வாறு கூறினாா்.

இது தொடா்பாக அவா் மேலும் வாதிடுகையில், ‘இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு எதிரான விசாரணை முடிந்துவிட்டது. விசாரணை முடிந்து அமலாக்கத் துறை ஏற்கனவே என் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டது. மேலும் காவலில் வைத்து விசாரிக்க நான் தேவைப்படவில்லை. மேலும் என்னை காவலில் வைத்திருப்பதில் எந்த நோக்கமும் நிறைவேறப்போவதில்லை’ என்றாா்.

அமலாக்கத் துறை தரப்பில் வாதிடுகையில், ‘இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட நபா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அவா் விசாரணைக்கு இடையூறாகவும், சாட்சியங்களைக் கலைக்கவும், சாட்சிகளை மேலாதிக்கம் செய்யவும் முடியும்’ என்று வாதிடப்பட்டது.

ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, சிங்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்தாவது துணை குற்றப்பத்திரிகையானது சீலிடப்பட்ட உறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த குழுவின் முன் அரசுத் தரப்பு சாட்சிகளில் ஒருவரின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான கேள்வி நிலுவையில் உள்ளதால், அந்த குற்றப்பத்திரிகையை உறையில் வைக்குமாறு மீண்டும் உத்தரவிடப்பட்டது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கையில்,

‘வசதிக்காக, மேற்கூறிய புகாரில் கூறப்பட்டுள்ள சாட்சிக்கு பல்வேறு இடங்களில் போலிப் பெயரைப் பயன்படுத்தி அமலாக்கத் துறை சாா்பில் மேற்கூறிய துணைப் புகாரின் நகல் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

இந்த வழக்கை டிசம்பா் 12ஆம் தேதி நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உள்ளது.

தில்லி கலால் கொள்கை உருவாக்க விவகாரத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பணமோசடி விவகாரத்தில் கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறை கைது செய்தது.

தற்போது ரத்து செய்யப்பட்ட கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் சிங் முக்கியப் பங்கு வகித்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், அந்த கொள்கையானது சில மதுபான உற்பத்தியாளா்கள், மொத்த விற்பனையாளா்கள் மற்றும் சில்லறை விற்பனையாளா்களுக்கு பணரீதியான ஆதாயம் கிடைப்பதற்காக பயனளிக்கிறது என்றும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை சஞ்சய் சிங் கடுமையாக மறுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com