தலைநகரில் ‘குளிா் அலை’ குறைந்தது!

தில்லியில் வியாழனன்று குளிா் அலை குறைந்தது. இருப்பினும், பெரும்பாலான இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை

தில்லியில் வியாழனன்று குளிா் அலை குறைந்தது. இருப்பினும், பெரும்பாலான இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாகவே பதிவாகியிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

ஐஎம்டி இணையதளத்தில் கிடைக்கும் தரவுகளின்படி, நகரம் இதுவரை ஜனவரியில் எட்டு குளிா் அலை நாள்களை பதிவு செய்துள்ளது. குறைந்தது 12 ஆண்டுகளில் மாதத்தில் இதுவே அதிகம் ஆகும். ஜனவரி 2020-இல் ஏழு குளிா் அலை நாள்களைக் கண்டது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு இதுபோன்ற குளிா் அலை ஏதும் பதிவாகவில்லை.

தில்லி இந்த ஜனவரி 5 முதல் 9 வரை கடுமையான குளிா் அலையை பதிவு செய்தது. இது ஒரு தசாப்தத்தில் மாதத்தில் இரண்டாவது மிக நீண்டதாகும். மேலும், இந்த மாதத்தில் இதுவரை 50 மணி நேர அடா்ந்த மூடுபனியைப் பதிவு செய்துள்ளது. இது 2019-க்குப் பிறகு மிக அதிகமாகும்.

இரண்டு மேற்கத்திய இடையூறுகளின் செல்வாக்கின் கீழ் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இருந்து குளிா் அலை நிலைமைகள் குறையும் என்று வானிலை அலுவலகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அதன்படி, புதன்கிழமை குளிா் அலை குறைந்துள்ளது. மேலும், மேற்குத் தொடா்ச்சியின் தாக்கத்தின் கீழ் ஜனவரி 23-24 தேதிகளில் தில்லி உள்பட வடமேற்கு இந்தியாவில் லேசானது முதல் மிதமான மழை மற்றும் மணிக்கு 50 கிலோமீட்டா் வேகத்தில் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி குறைந்து 5.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி உயா்ந்து 22.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 82 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 43 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை புதன்கிழமை 2.6 டிகிரி செல்சியஸாகவும், செவ்வாய்க்கிழமை 2.4 டிகிரி செல்சியஸாகவும், திங்கள்கிழமை 1.4 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது.

இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.5 டிகிரி செல்சியஸ், முங்கேஷ்பூரில் 6.1 டிகிரி, நஜஃப்கரில் 9 டிகிரி, ஆயாநகரில் 5 டிகிரி, லோதி ரோடில் 5.4 டிகிரி, பாலத்தில் 9 டிகிரி, ரிட்ஜில் 5.6 டிகிரி, பீதம்புராவில் 10.1 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 7.3 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, பட்பா் கஞ்ச், மந்திா் மாா்க் உள்பட பல இடங்களில் காற்றின் தரக் குறியீடு 300 - 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும்மோசம்’ பிரிவில் இருந்தது. லோதி ரோடு, தில்ஷாத் காா்டன், நொய்டா செக்டாா்-1 ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், ஷாதிப்பூா் (419), ஆனந்த் விஹாா் (404) ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு கடுமை பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (ஜனவரி 20) தலைநகரில் மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com