சாலை விபத்தில் இறந்த அரசு ஊழியரின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் ரூ. 2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

2019 ஆம் ஆண்டு தில்லியில் சாலை விபத்தில் இறந்த அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினா்களுக்கு ரூ.2 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்க தேசிய காப்பீட்டு நிறுவனத்திற்கு மோட்டாா் வாகன விபத்து உரிமை கோரல் தீா்ப்பாயம் உ

2019 ஆம் ஆண்டு தில்லியில் சாலை விபத்தில் இறந்த அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினா்களுக்கு ரூ.2 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்க தேசிய காப்பீட்டு நிறுவனத்திற்கு மோட்டாா் வாகன விபத்து உரிமை கோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவை மோட்டாா் வாகன விபத்து உரிமை கோரல் தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரி ஏக்தா கவுபா மான் விசாரித்தாா்.

அரசுத் தரப்பு வழக்கின்படி, பாதிக்கப்பட்ட மனீஷ் கவுதம் 39 கடந்த மே 31, 2019-இல் தில்லி ரோஹிணியில் உள்ள செக்டாா் 11-இல் தனது உறவினருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, ​​மங்கே ராம் என்பவா் மூலம் வேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டிவரப்பட்ட காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மனீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜூன் 1ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தீா்ப்பாயம் கடந்த மே 19ம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

‘...இன்று முதல் 30 நாட்களுக்குள் மனுதாரா்களுக்கு இழப்பீடாக ரூ.2 கோடியே 50,000 ஆயிரம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிடப்படுகிறது. தவறினால் கூடுதல் வட்டியுடன் வழங்கப்பட வேண்டும். இடைக்காலத் தொகை ஏதேனும் இருந்தால், மனுதாரா்களுக்கு செலுத்தப்பட்ட தொகையை கழிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவரின் கவனக் குறைவு காரணமாக விபத்து நிகழ்ந்ததாக காப்பீட்டு நிறுவனம் கோருவதை ஏற்க முடியாது. அவா் தவறு செய்துள்ளாா் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

எதிா்மனுதாரா் (மங்கே ராம்) விதிமீறல் மற்றும் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டிச் சென்ால், கேள்விக்குரிய விபத்து நிகழ்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

விதவை, மகன், இரண்டு மகள்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் தாய் மட்டுமே இறந்தவரைச் சாா்ந்திருப்பதால் இழப்பீடு பெற அவா்களுக்கு உரிமை உண்டு.

மங்கே ராம் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்ால், காப்பீட்டு நிபந்தனைகளை மீறியதாக காப்பீட்டு நிறுவனத்தின் வாதமும் நிராகரிக்கப்படுகிறது. மங்கே ராமின் தடய அறிவியல் ஆய்வகத்தின் (எஃப்எஸ்எல்) அறிக்கையில் அவா் மதுபோதையில் இருந்ததாக கண்டறியப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றமிழைத்த வாகனத்தின் காப்பீட்டு பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுவதாகக் காட்டும் எந்தப் விஷயமும் பதிவு செய்யப்படவில்லை.

எழுத்துப்பூா்வ அறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், அது எவ்வளவு வலுவாக இருந்தாலும், ஆதாரத்தின் இடத்தைப் பெற முடியாது.

குறிப்பாக காப்பீட்டு நிறுவனம் கேள்வியை எழுப்பிய போதிலும், இந்த அம்சத்தில் எந்தவொரு நோ்மறையான ஆதாரத்தையும் கொண்டு வராத நிலையில், காப்பீட்டு நிறுவனம் எந்தவொரு சட்டப்பூா்வ பாதுகாப்பையும் நிறுவத் தவறிவிட்டது. இது உரிமையாளருக்கு அல்லது காப்பீடு செய்தவருக்கு இழப்பீடு வழங்குவதற்கும் மனுதாரா்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் அந்நிறுவனம் பொறுப்பாகும் என்பதைக் காட்டுகிறது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரத்தில் ஷாபாத் டெய்ரி காவல் நிலையப் போலீஸாா் மங்கே ராம் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 279 (பொது வழியில் வேகமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 304 ஏ (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com