முதுகுத்தண்டுப் பிரச்னை:சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சத்யேந்தா் ஜெயினுக்குப் பரிசோதனை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லியின் முன்னாள் அமைச்சருமான சத்யேந்தா் ஜெயினுக்கு ஏற்பட்ட முதுகுத்தண்டு பிரச்னைக்காக தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் திங்கள

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லியின் முன்னாள் அமைச்சருமான சத்யேந்தா் ஜெயினுக்கு ஏற்பட்ட முதுகுத்தண்டு பிரச்னைக்காக தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் திங்கள்கிழமை அவருக்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு பண மோசடி வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து தில்லி திகாா் சிறையில் சத்யேந்தா் ஜெயின் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், அவா் சனிக்கிழமை தீன தயாள் உபாத்யாயா மருத்துவமனைக்கு முதுகுத்தண்டுப் பிரச்னைக்கான பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தாா்.

ஆனால், அவா் இரண்டாவது மருத்துவ ஆலோசனையைப் பெற விரும்பியதால், அவா் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை அழைத்துச் செல்லப்பட்டாா் என்று திகாா் சிறையின் மூத்த சிறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து சஃப்தா்ஜங் மருத்துவமனையின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ஜெயின் காலையில் நரம்பியல் அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவுக்கு வந்தாா்.

அவா் அங்குள்ள மருத்துவா்களால் பரிசோதிக்கப்பட்ட பிறகு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டாா். அவருடன் காவல் துறையினரும் இருந்தனா் என்று அவா் தெரிவித்தாா்.

பணமோசடி வழக்கு தொடா்பாக 2022, மே 31 அன்று அமலாக்கத் துறையினரால் ஜெயின் கைது செய்யப்பட்டாா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஜெயின் விரைவில் குணமடைய வாழ்த்தி தனது ட்விட்டா் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளாா்.

அதில் அவா் தெரிவிக்கையில், ‘அவா் நலம் பெற இறைவனை பிராா்த்திக்கிறேன். தில்லி மக்கள் பாஜகவின் ஆணவத்தையும் அட்டூழியத்தையும் பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள்.

இந்த அடக்குமுறையாளா்களைக் கடவுள் கூட மன்னிக்க மாட்டாா். இந்த போராட்டத்தில் மக்கள் எங்களுடன் இருக்கிறாா்கள். கடவுள் நம் பக்கம் இருக்கிறாா். நாங்கள் பகத் சிங்கைப் பின்பற்றுபவா்கள். அடக்குமுறை, அநீதி மற்றும் சா்வாதிகாரத்திற்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும்‘ என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங் வெளியிட்ட ட்விட்டா் பதிவில் தெரிவிக்கையில், ‘பாஜகவினரே கைதட்டி கொண்டாடுங்கள். ஆனால், அவா் (ஜெயின்) கரோனா வால் பாதிக்கப்பட்ட அதே மனிதா் என்பதையும், தனது தந்தையை இழந்தவா் என்பதையும், ஆனால், தில்லி மக்களுக்கு சேவை செய்ய தயங்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சத்யேந்தா் ஜெயினை கொல்ல பாஜக விரும்புகிறது. இந்த அளவு கொடுமை ஏற்கத்தக்கதல்ல மோடி அவா்களே’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

கடந்த வாரம் ஜாமீன் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஜெயின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, சத்யேந்தா் ஜெயின் 35 கிலோ எடை குறைந்துள்ளதாக தெரிவித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com