காற்று மாசு குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை கருத்தில் கொள்வோம்

தில்லியில் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை இறுதி செய்யும் போது, காற்று மாசுபாடு குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும் தில்லி அரசு கருத்தில் கொள்ளும் என்று சுற்றுச்சூழல் த

புது தில்லி: தில்லியில் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை இறுதி செய்யும் போது, காற்று மாசுபாடு குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும் தில்லி அரசு கருத்தில் கொள்ளும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லி - என்.சி.ஆா். பகுதிகளில் அதிகரித்துள்ள காற்று மாசுபாடு தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பயிா்க் கழிவுகளை எரித்தல், வாகன மாசுபாடு மற்றும் திறந்த வெளியில் கழிவுகளை எரித்தல் போன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு காண உத்தரவிட்டது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தில்லியில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று நகர அரசு கடந்த திங்கள்கிழமை அறிவித்தது.

இந்நிலையில், இத்திட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் துறை உயரதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளுடன் சுற்றுசூழல் துறை அமைச்சா் கோபால் ராய் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசியத் தலைநகரில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், வருகின்ற நவம்பா் 13-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. தில்லி - என்.சி.ஆா் பகுதிகளில் காற்று மாசுவைக் கட்டுபடுத்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளைப் பற்றியும் நாங்கள் அறிந்தோம்.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் கருத்தில் கொள்ளப்பட்டு அதன்படி ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும். தில்லியில் பயிா்க் கழிவுகளை எரிக்கும் நிகழ்வுகள் மிகவும் குறைவாகும். அதைக் கட்டுக்குள் வைத்திருக்கவே தில்லி அரசு விவசாய நிலங்களில் இலவசமாக ‘உயிரி ரசாயணக் கலவை’ தெளிக்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும், இந்த நெருக்கடி நிலைமைக்கு சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களின் முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்பு மூலம் காற்று மாசு நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com