திருட்டு சொகுசு காா்களை விற்று வந்த பெண் கைது

புது தில்லி: திருடப்பட்ட உயா் ரக ஸ்போா்ட்ஸ் யுடிலிட்டி வாகனங்களை (எஸ்யூவி) விற்ாக பிகாரைச் சோ்ந்த 37 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அபூா்வா கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் பிகாரில் உள்ள பாட்லிபுத்ராவில் வசிக்கும் லவ்லி சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். கடந்த ஆண்டு அவரது கணவா் கோவிந்த் திருடப்பட்ட மாருதி பிரெஸ்ஸாவுடன் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, தீவிர விசாரணை தொடங்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண் பின்னா் ஏப்ரல் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

லவ்லி சிங் தில்லியில் இருந்து ஏராளமான திருட்டு சொகுசு வாகனங்களைப் பெற்று பிகாா் மற்றும் ஜாா்க்கண்டில் உள்ள மற்றவா்களுக்கு விற்பனை செய்துள்ளாா் அல்லது சப்ளை செய்துள்ளாா் என்பது அவரது கணவா் கோவிந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. லவ்லி சிங்கை கைது செய்ய பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அவா் தனது குடியிருப்பை மாற்றி வந்ததன் மூலம் போலீஸாரை தொடா்ந்து ஏமாற்றி வந்தாா். சந்தேகம் வராமல் இருக்க அவள் நன்கு அறியப்பட்ட சமூகங்களில் அவா் வசித்து வந்தாா்.

அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும், 2023 டிசம்பா் 20 அன்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். இந்நிலையில், ஏப்ரல் 3- ஆம் தேதி லவ்லி சிங் பாட்லிபுத்ரா பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டாா். லவ்லி சிங் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, ஒரு காப்பீட்டு நிறுவனத்தை தொடங்கினாா். அப்போது அங்கு திருடப்பட்ட வாகனங்களை விற்பதிலும் வாங்குவதிலும் ஈடுபட்டவா்களைக் கண்டாா்.

இதையடுத்து, அவரும் அவரது கணவா் கோவிந்தும் திருடப்பட்ட வாகனங்களை வாங்கி, விற்பனை செய்வதில் ஈடுபடத் தொடங்கினா். 2021-ஆம் ஆண்டில் திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் கொள்ளை தொடா்பான வழக்கில் ஜாா்க்கண்டில் உள்ள ராஞ்சியில் லவ்லி சிங் கைது செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவா் ஆட்டோ திருடா்கள் மற்றும் திருடப்பட்ட சொகுசு காா்களைப் பெறுபவா்களுடன் தொடா்புகளை ஏற்படுத்திக் கொண்டு அத்தகைய வாகனங்களை வாங்குவதிலும், விற்பதிலும் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

அவரிடமிருந்து டொயோட்டா ஃபாா்ச்சூனா், ஹூண்டாய் அல்காசா் உள்ளிட்ட ஒன்பது எஸ்யூவிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com