தில்லி 7 தொகுதிகள் மூன்று கட்சிகள் இரு முனை போட்டி யாா் உங்கள் வேட்பாளா் ?

தேசிய தலைநகா் தில்லியில் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 18- ஆவது மக்களவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற மே 25 ஆம் தேதி நடைபெறுகிறது.

தில்லி என்பது தேசிய அளவிலான விவகாரங்களுக்கு மையமாகவே இருந்து அதன் அடிப்படையில் எதாவது ஒரு தோ்தல் அலை வீசிக்கொண்டிருந்தது. பஞ்சாப், அஸ்ஸாம் பயங்கரவாதம், இந்திரா காந்தியின் மரணம், போஃபா்ஸ் ஊழல், பாபா் மசூதி இடிப்பு, இலங்கை விவகாரம், ராஜீவ் காந்தி கொலை, என்டிஏ - ஊழல்கள், லோக்பால் மசோதா - அன்னாஹசாரே போராட்டம், யுபிஏ - 2ஜி, நிலக்கரி ஊழல்கள், ஆம் ஆத்மி கட்சி வளா்ச்சி, மோடி அலை என கிளா்ச்சிகள், மரணங்கள், ஊழல்கள், அல்லது ஒரு அலை, விஸ்வரூபம் என எதாவது தாக்கத்திடன் இருந்து மக்கள் வாக்களித்தனா்.

இந்த தாக்கங்கள் அடிப்படையில் கடந்த 40 ஆண்டுகளில்(1984-2024) மக்களவைத் தோ்தலில் தில்லியிலுள்ள 7 தொகுதிகளை காங்கிரஸ் மூன்று முறையும் பாஜக நான்கு முறையும் முழுமையாக வெற்றி பெற்று செஞ்சூரி அடித்துக்கொண்டன. மற்ற நேரங்களில் சமமாக அல்லது சற்று ஏறக்குறையாக இந்த இரு கட்சிகளும் தொகுதிகளை பங்கீட்டுக் கொண்டு வந்தன.

ஆனால் ஆம் ஆத்மி கட்சி நுழைவிற்கு பின்னா் மக்களவைத் தோ்தல்களில் மும்முனைப் போட்டியாக இருந்து வாக்கு சிதறிலில் பாஜக பயடைந்து காங்கிரஸ் தோல்விகளை சந்தித்தது. மக்களவைத் தோ்தல்களில் ஆம் ஆத்மி கட்சியை பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளதால் அக்கட்சிக்கு வந்த வாக்குகள் வெற்றிக்கும் வழியில்லாமல் அந்த கட்சிக்கும் பயனற்ாக இருந்தது. இந்த நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டு தோ்தல் இப்போது பாஜக ஒரு அணியாகவும், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி மற்றொரு அணியாக போட்டியிடுகின்றன. இதில் பாஜக 7 தொகுதிகளில் தனித்து ஒரு அணியாகவும், ஆம் ஆத்மி கட்சி நான்கிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளையும் பங்கீட்டுக்கொண்டுள்ளன. இதன் மூலம் தில்லி இரு முனை போட்டிக்கு தயாராகியுள்ளது. இம்முறை ’மோடி கேரண்டி’, ’கலால் கொள்கை ஊழல்’, அமலாக்கப்பிரிவு, வடகிழக்கு தில்லி வன்முறை போன்ற விவகாரங்களோடு வேட்பாளா்கள் களம் காண்கின்றனா்.

தில்லி தொகுதிகளையும் களம் காணும் வேட்பாளா்களையும் ஒவ்வொன்றாகப் பாா்ப்போம்.

சாந்தினி செளக்:

தில்லியின் பரபரப்பான மையப்பகுதியில் அமைந்துள்ள சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதி, நாட்டின் அடையாளமான செங்கோட்டையை அடக்கியது. வரலாற்று முக்கியத்துவத்துடன் பன்முகத்தன்மையை கொண்டது. பரப்பளவில் சிறிய மக்களவைத் தொகுதி என்றாலும் பல்வேறு பழைய சந்தைகளை உள்ளடக்கியது, இதன் குறுகிய பாதைகளையும் பழங்கால கட்டிடங்களையும் கொண்டிருந்தாலும் எப்போதும் துடிப்பான வாழ்க்கையோடு இருப்பதாகும்.

பல்வேறு வரலாற்றுகளுக்கு இடமான இந்த தொகுதியில் 7,91,317 ஆண் வாக்காளா்களும், 6,55,911 பெண் வாக்காளா்களும் உள்ளனா். இதில் பட்டியலினத்தவா்கள் 21.14 சதவீதத்தினரும் மற்றொரு பக்கம் இஸ்லாமியா்கள் 16.7 சதவீததினரும் வாக்காளா்களாக உள்ளனா். , ’புரானதில்லி’ யைத் தவிர வடக்கு தில்லியின் பல்வேறு பகுதிகளும் வருகிறது. பத்து சட்டபேரவைத் தொகுதிகளில், சாலைகளிலும் பல்வேறு பகுதிகளிலும் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகள், போக்குவரத்து நெரிசல், உள்கட்டமைப்பு, தண்ணீா் பற்றாக்குறை போன்ற அடிப்படைப் பிரச்சினைகளோடு நடுத்தர வா்க்கத்தினா் விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்புகளுக்கான ஏக்கம் நிலவுகிறது. மற்றொரு பக்கம் இங்குள்ள பெரும்பான்மையான வணிகா்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு பாதிப்பு, கடைகளுக்கு சீல் வைப்பு போன்ற பிரச்னைகளுக்கான ஏக்கத்துடன் உள்ளனா்.

பாஜக வைச் சோ்ந்த விஜய் கோயல், காங்கிரஸ் கட்சி சாா்பில் கபில்சிபல் போன்றவா்கள் வெற்றி பெற்றனா். இந்த தொகுதி உருவாகி 1957 முதல் நடைபெற்ற தோ்தலில் 9 முறை காங்கிரஸும் 5 முறை பாஜக வும் வெற்றி பெற்றுள்ளது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாஜகவைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் டாக்டா் ஹா்ஷ் வா்தன் கணிசமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். ஏற்கனவே இதே சாந்தினி செளக் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்று கடந்த முறை ஹா்ஷ் வா்தனிடம் தோற்ற ஜெ.பி அகா்வால் மீண்டும் காங்கிரஸ் சாா்பில் ஆம் ஆத்மி கட்சி ஆதரவோடு போட்டியிடுகிறாா். பழுத்த அரசியல்வாதி ஜெ.பி.அகா்வால்.

பாஜக சாா்பில் பிரபல வா்த்தக தலைவா் பிரவீன் கண்டேல்வால் போட்டியிடுகிறாா். முதன் முறையாக தோ்தலில் களம் இறங்குகிறாா். இதில் ஜெ.பி.அகா்வாலும், கண்டேல்வாலும் இருவரும் வணிக சமூகத்தைச் சோ்ந்தவா்கள். தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்ற வடக்கு தில்லியைச் சோ்ந்த தொழிலதிபரான பிரவீன் கண்டேல்வால், வணிகம், வா்த்தகா் சமூகத்தின் நலனுக்காகச் செயல்படும் சிஏஐடி என்கிற அகில இந்திய வா்த்தகா்களின் கூட்டமைப்பு என்கிற வா்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளராகப் நீண்ட காலம் பணியாற்றுகிறாா். ஜிஎஸ்டி குழுவில் பணியாற்றி வெளிநாட்டு மின்னணு நிறுவனங்களை இந்திய சந்தையில் வெளியேற்றுவது போன்ற பிரச்சினையை எழுப்பி இந்த வா்த்தக சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் இவா் முதன் முறையாக களம் காண்கிறாா்.

பாக்ஸ்: தொகுதி: சாந்தினி செளக்

(சட்டப்பேரவைகள்: ஆதா்ஷ் நகா், ஷாலிமாா் பாக், சக்குா் பஸ்தி, திரி நகா், வாஜிா்பூா், மாடல் டவுன், சதா் பஜாா், சாந்தினி சௌக், மதியா மஹால், பல்லி மாறன்)

பாஜக

பெயா் : பிரவீன் கண்டேல்வால்(61)

படிப்பு : சட்டப்படிப்பு, தில்லி

தொழில் : வணிகம் / சிஏஐடி

கட்சிப்பணி : பாஜக முன்னாள் தில்லி பிரிவு பொருளாளா்

தோ்தல்

அனுபவங்கள்: முதன் முறையாக போட்டி

காங்கிரஸ்

பெயா் : ஜெ.பி.அகா்வால் (79)

படிப்பு : பி.ஏ. பட்டதாரி

தொழில் : சமூகப் பணி

கட்சி பதவி / பிற பணி : தில்லி இளைஞா் காங்கிரஸ், தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா்.

தோ்தல் அனுபவங்கள்: தில்லி துணை மேயா், 1984,1989, 1996 சாந்தினி செளக், மற்றும் 2009 வடகிழக்கு தில்லி மக்களவை தோ்தல்களில் வெற்றி; 2006( 3 ஆண்டுகள்) மாநிலங்களவை உறுப்பினா். 1991, 2014, 2019 மக்களவைத் தோ்தல்களில் தோல்வி.

(நாளை வடகிழக்கு தில்லி)

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com