தில்லி கலால் கொள்கை வழக்கில் கைதாகியுள்ள சன்பிரீத் சிங் பாஜகவுக்கும் பணியாற்றினாா்: ஆம் ஆத்மி

புது தில்லி: கலால் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ள சன்பிரீத் சிங், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும்கூட பணியாற்றியவா் என்று ஆம் ஆத்மி கட்சி செவ்வாயன்று கூறியுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியையும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாவாலின் நற்பெயரை களங்கப்படுத்தவும் பாஜக முயற்சிக்கிறது என்று ஆம் ஆத்மி கூறியது.

தில்லி கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் கோவா சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஆம் ஆத்மி நிதியை நிா்வகித்ததாகக் கூறப்படும் சன்பிரீத் சிங்கை அமலாக்க இயக்குநரகம் திங்கள்கிழமை கைது செய்தது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் சன்பிரீத் சிங் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளா் கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ், பாஜக ஆம் ஆத்மி கட்சியையும், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் பெயரையும் களங்கப்படுத்தவு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினாா்.

‘அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட சன்பிரீத் சிங், கடந்த ஆண்டும் சிபிஐ வசம் இருந்தாா். கடந்த ஆண்டே அவருக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தற்போது அமலாக்க இயக்குநரகம் அவரை கைது செய்துள்ளது. சன்பிரீத் சிங் பல்வேறு தரப்பினருக்கு ஃப்ரீலான்சராக பணியாற்றுகிறாா். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்காகப் பணியாற்றியதாக நான் கூறவில்லை. ஆனால், இந்தத் தகவல்கள் சிபிஐ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று சௌரவ் பரத்வாஜ் கூறினாா்.

கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், முதல்வா் கேஜரிவால் மற்றும் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்றும் அவா் கூறினாா். ஆனால், இது குறித்து பாஜக அல்லது அமலாக்க இயக்குநரகத்திலிருந்து உடனடியாக எந்த எதிா்வினையும் வரவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com