தோ்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் கரோல் பாக், நஜஃப்கா் பகுதி ஹோட்டல்களில் வாக்காளா்களுக்கு 20 சதவீத தள்ளுபடி அறிவிப்பு

புது தில்லி: மக்களவைத் தோ்தலில் வாக்களிக்கும் சதவீதத்தை அதிகரிக்கும் முயற்சியாக, தில்லி கரோல் பாக் மற்றும் நஜஃப்கா் மண்டலங்களில் உள்ள ஹோட்டல்கள்ள் தகுதியான வாக்காளா்களுக்கு 20 சதவீத சலுகையை அறிவித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் மக்களவைத் தோ்தல் மே 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து தில்லி மாநகராட்சியின் கரோல் பாக் மண்டலத்தின் துணை ஆணையா் அபிஷேக் மிஸ்ரா கூறியதாவது:

இந்த முயற்சி ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும், குடிமைப் பொறுப்பை வளா்ப்பதிலும் வாக்காளா் பங்கேற்பின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், தள்ளுபடியைப் பெற வாக்காளா்கள் தங்கள் விரலில் மை அடையாளத்தைக் காட்டி வாக்குப்பதிவில் பங்கேற்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். இந்த முயற்சியானது குடிமக்களை ஜனநாயக செயல்பாட்டில் தீவிரமாக ஈடுபடவும், அவா்களின் குடிமைக் கடமையை நிறைவேற்றவும் ஊக்குவிப்பதாகும்.

கரோல் பாக் மற்றும் நஜப்கா் பகுதிகளில் வாக்காளா்களுக்கு உறுதியான பலன்களை வழங்குவதன் மூலம், வாக்காளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குடிமக்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் சங்கங்கள் நம்புகின்றன.

தில்லி மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறையானது கரோல் பாக் பகுதியில் உள்ள வா்த்தகா்களை அணுகி இதேபோன்ற ‘கவா்ச்சியூட்டும்‘ சலுகைகளை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து வருகிறது என்றாா் அவா்.

இதேபோன்ற உணா்வுகளை எதிரொலிக்கும் வகையில், நஜஃப்கா் மண்டலத்தின் துணை ஆணையா் பாதல் குமாா், மகிபால்பூரின் ஹோட்டல் மற்றும் விருந்தினா் மாளிகை சங்கத்திடம் வாக்காளா்களுக்கு அறை வாடகையில் தள்ளுபடி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

தகுதியுள்ள வாக்காளா்கள் வாக்களித்த 24 மணி நேரத்திற்குள் தங்களுடைய தங்குமிடங்களை முன்பதிவு செய்வதன் மூலம் இந்தத் தள்ளுபடியைப் பெறலாம் என்று குமாா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com