சியாச்சின் பனிமலையில் ராஜ்நாத் சிங்

புது உலகிலேயே உயரமான போர்க்களமாகக் கருதப்படும் சியாச்சின் பனிமலைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம்
சியாச்சின் பனிமலையில் ராஜ்நாத் சிங்

புது உலகிலேயே உயரமான போர்க்களமாகக் கருதப்படும் சியாச்சின் பனிமலைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொண்டு, அங்கு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை சந்தித்தார். ராணுவத்தின் தயார்நிலை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

கடல் மட்டத்தில் இருந்து 15,100 அடி உயரத்தில் சியாச்சின் பனிமலைப் பகுதி அமைந்துள்ளது. உலகிலேயே உயரமான போர்க்களமாகக் கருதப்படும் இந்த பனிமலைப் பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை பயணம் மேற்கொண்டார். இப்பகுதியில் இந்திய ராணுவம் 40ஆவது ஆண்டாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டேவுடன் சியாச்சினுக்குச் சென்ற ராஜ்நாத் சிங் அந்தப் பகுதியில் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சியாச்சினில் ராணுவ வீரர்களிடையே ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

இந்தப் பனிமலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களின் இரும்பு போன்ற மன உறுதிக்குப் பாராட்டுகள். உங்களின் வீரமானது எதிர்காலத் தலைமுறைகளுக்கு உந்துசக்தியாக இருக்கும்.

சியாச்சின் என்பது இந்தியாவின் இறையாண்மைக்கும் மன உறுதிக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. தில்லி, இந்தியாவின் தலைநகராகவும் மும்பை, தேசத்தின் பொருளாதாரத் தலைநகராகவும் பெங்களூரு, தொழில்நுட்பத் தலைநகராகவும் இருப்பதைப் போன்று சியாச்சின் என்பது வீரதீரத்தின் தலைநகராகத் திகழ்கிறது.

மோசமான வானிலைக்கு இடையிலும் தாய்நாட்டைக் காப்பதற்காக ராணுவ வீரர்கள் இங்கு பணியாற்றி வருவது பாராட்டத்தக்கது. எல்லையில் நமது வீரர்கள் துணிவுடன் நிற்பதால்தான் நாம் உள்நாட்டில் அமைதியான வாழ்க்கையை வாழ முடிகிறது.

தீபாவளியின் முதல் விளக்கும், ஹோலி பண்டிகையின் முதல் வண்ணமும் நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். இது தெய்வங்கள், துறவிகள், குருமார்கள் ஆகியோருக்கு முதல் உணவு அளிக்கப்படுவதைப் போன்றதாகும். நம்மைக் காக்கும் எந்தத் தெய்வத்துக்கும் படைவீரர்கள் குறைந்தவர்கள் அல்ல.

வருங்காலத்தில் தேசியப் பாதுகாப்பின் வரலாறு எழுதப்படும்போது சியாச்சின் பனிமலைப் பகுதியில் பணியில் ஈடுபட்ட நமது வீரர்களின் இரும்பு போன்ற மன உறுதி பெருமையுடன் நினைவுகூரப்படும் என்றார்.

சியாச்சினில் வான்வழியாக கண்காணிப்பில் ஈடுபட்ட அவர், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களின் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் "சியாச்சினில் உள்ள எல்லைச் சாவடிக்குச் சென்றிருந்தேன். கடுமையான தட்பவெப்ப சூழலுக்கு இடையே பணியில் ஈடுபட்டுள்ள நமது வீரர்களுடன் கலந்துரையாடினேன். கடமையைச் செய்வதில் அவர்கள் காட்டும் வீரதீரத்தைப் பாராட்டினேன்' என்று தெரிவித்துள்ளார்.

சியாச்சினில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டபோது உயிர்நீத்த வீரர்களுக்கு அங்குள்ள போர் நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, லடாக்கில் உள்ள லே பகுதிக்கு கடந்த மாதம் 24ஆம் தேதி சென்ற ராஜ்நாத் சிங், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினார். அப்போதே அவர் சியாச்சின் செல்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது.

எனினும், மோசமான வானிலை காரணமாக அப்போது அவரால் அங்கு செல்ல இயலவில்லை. இதையடுத்து, சியாச்சினில் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுடன் அவர் லே பகுதியில் இருந்து அப்போது தொலைபேசி மூலம் பேசினார்.

கூடிய விரைவில் சியாச்சினுக்கு வருவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். அதன்படி அவர் சியாச்சினுக்கு திங்கள்கிழமை பயணம் மேற்கொண்டது

குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com