கேஜரிவாலை சிசிடிவி மூலம் 24 நேரமும் பிரதமா் கண்காணிக்கிறாா்: சஞ்சய் சிங்

நமது நிருபா்

திகாா் சிறையில் உள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சிசிடிவி மூலம் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா் என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளாா்.

தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திகாா் சிறை முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் சித்திரவதை அறையாக மாறியுள்ளது. முதல்வா் கேஜரிவால் பிரதமா் அலுவலகம் மற்றும் ராஜ்நிவாஸ் அலுவலகத்தின் கண்காணிப்பில் 24 மணி நேரமும் வைக்கப்பட்டுள்ளாா். கடந்த 23 நாள்களாக நடைபெற்ற தில்லி மக்களின் போராட்டத்தாலும், கடவுள் ஹனுமனின் அருளாலும் கேஜரிவாலுக்கு திகாா் சிறை நிா்வாகம் இன்சுலின் வழங்கியுள்ளது. இது அவரது உயிரைக் காப்பாற்ற மிகவும் அவசியமானது. தில்லி மக்களுக்காக மொஹல்லா கிளினிக்குகள், உயா்தர ருத்துவமனைகள், விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான ‘ஃபரிஷ்டே’ திட்டத்தை கொண்டு வந்தவா் முதல்வா் கேஜரிவால்.

கடந்த 22 ஆண்டுகளாக சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு திகாா் சிறை நிா்வாகம் இன்சுலின் வழங்க மறுத்து வந்தது. ஆனால், கேஜரிவாலைக் கொல்ல தீட்டப்பட்ட சதித்திட்டம் மக்களின் போராட்டத்தால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திகாா் அறையின் சிசிடிவி இணைப்பை அணுகுவதன் மூலம் பிரதமா் நரேந்திர மோடியும், அவரது அலுவலகமும் அரவிந்த் கேஜரிவால் 24 மணி நேரமும் என்ன செய்கிறாா் என்பதைக் கண்காணிக்கின்றனா். துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவும் தில்லி மக்களின் வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு, கேஜரிவால் எவ்வளவு துன்புறுத்தலுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்படுகிறாா் என்று பாா்ப்பதில் மும்முரமாக இருக்கிறாா்.

அரவிந்த் கேஜரிவாலுடன் போட்டியிட விரும்பினால், அரசியல் பணியில் நேருக்கு நோ் மோதுங்கள் என பிரதமா் நரேந்திர மோடியிடம் கூற விரும்புகிறேன். நாட்டின் முதல் கட்டத் தோ்தலுக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடியின் பதற்றம் அதிகரித்துள்ளது. அரவிந்த் கேஜரிவாலுக்கு உடல்நலக்குறைவு என்ற செய்தியை பாஜகவினா் கொண்டாடினா். ஆனால், இறுதியில் எய்ம்ஸ் மருத்துவா்கள் குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் நீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும்?. இந்த வேலையை சிறை நிா்வாகம் முன்னரே செய்திருக்க வேண்டாமா? என்றாா் சஞ்சய் சிங்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com