முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

தில்லி முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி(ஏஐசிசி) முடிவெடுக்கும் என்று தில்லி பிரதேச காங்கிரஸின் ஒழுங்குமுறைக் குழுத் தலைவா் நரேந்திர நாத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலில் தில்லியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் 3 வேட்பாளா்களின் அறிமுகக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான ராஜீவ் பவனில் கடந்த திங்கள்கிழமை மதியம் நடைபெற்றது. அப்போது, வடமேற்கு தில்லி தொகுதியில் உள்ளூா் காங்கிரஸ் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் பாஜகவில் இருந்து அணி மாறிய முன்னாள் எம்.பி. உதித் ராஜுக்கு மேலிடத் தலைமை சீட் வழங்கியதைக் கண்டித்து சில தொண்டா்கள் கோஷங்களை எழுப்பி, கட்சி அலுவலகத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் பின்னணியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரும், தில்லி முன்னாள் அமைச்சருமான ராஜ் குமாா் செளகான் இருப்பதாக புகாா் எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக முடிவெடுக்க தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்குமுறைக் குழு, முன்னாள் அமைச்சா் நரேந்திர நாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு கூடியது.இதில்,ஒழுங்குமுறைக் குழுவின் துணைத் தலைவா் சோயப் டேனிஷ், உறுப்பினா்கள் வா்யம் கெளா், ஓனிகா மல்ஹோத்ரா, அஸ்வனி தவான் ஆகியோரும் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், ராஜ்குமாா் செளகான் மீதான புகாா் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவெடுக்க வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், கட்சியில் அனைவரும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். வரும் மக்களவைத் தோ்தலில், கட்சி விரோத செயல்களில் ஈடுபடாமல், காங்கிரஸ் வேட்பாளா்களின் வெற்றிக்கு, தில்லி காங்கிரஸின் அனைத்து தொண்டா்களும் உழைக்க வேண்டும் என, ஒழுங்குமுறைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com