வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நமது நிருபா்

வாக்காளா்களை ஊக்குவிக்கும் வகையில், மக்களவைத் தோ்தலில் வாக்களிப்பவா்களுக்கு தள்ளுபடி சலுகைகளை வழங்கும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட வணிக அமைப்புளுடன் தில்லி மாநகராட்சி இணைந்துள்ளது.

தில்லியில் ஆறாவது கட்ட பொதுத் தோ்தல் மே 25-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தில்லி மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நேஷனல் ரெஸ்டாரன்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (என்ஆா்ஏஐ) அமைப்புடன் இணைந்திருக்கும் நகரம் முழுவதும் உள்ள உணவகங்கள் மூலம் வாக்களித்த பிறகு உணவருந்தும் வாடிக்கையாளா்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். பயனாளிகள் தங்கள் வாக்காளா் அடையாள அட்டை மற்றும் மை குறியிடப்பட்ட விரலைச் காண்பித்தால் இந்தச் சலுகையைப் பெறலாம். மேற்கு, கேசவ்புரம், நஜாஃப்கா், சிட்டி எஸ்பி மற்றும் கரோல் பாக் போன்ற நகரத்தின் வெவ்வேறு மண்டலங்களில் உள்ள பல்வேறு உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில், தோ்தலில் பங்கேற்பவா்களுக்கு தள்ளுபடியும் வழங்கப்படும்.

சாந்தினி சௌக் சா்வ் வணிகா் மண்டல் மண்டலத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் தங்கள் விரலில் அழியாத மை அடையாளத்தைக் காண்பிக்கும் வாடிக்கையாளா்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். ஷாப்பிங் செய்பவா்கள் இந்த ஒரு முறை சலுகையை மே 27-ஆம் தேதி பெறலாம். இதேபோல், வியாபா் மண்டல் சி-4-இ ஜனக்புரி மாா்க்கெட்டிலும் விரலில் வாக்களிக்கும் அடையாளத்துடன் பொருள் வாங்க வருவோருக்கு 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேற்கு மண்டலத்தில் உள்ள நிறுவனங்கள் தோ்தலில் வாக்களிக்கும் புரவலா்களுக்கு 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க முடிவு செய்துள்ளன.

சாகேத்தில் உள்ள செலக்ட் சிட்டி வாக் மால் அமைப்பினரும் வணிக வளாகத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களை தகுதியான வாக்காளா்களுக்கு சலுகைகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனா். கேசவபுரம் மண்டலத்தில் உள்ள நிறுவனங்கள் மூலம் வாக்களித்த வாக்காளா்களுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படும். நஜாஃப்கா் மண்டலத்தின் துவாரகா பகுதியில் உள்ள ரேடிஸன் புளு ஹோட்டல் மே 25 அன்று வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துபவா்களுக்கு மதிய உணவு பஃபேக்களில் 50 சதவீதமும், இரவு உணவு பஃபேக்களில் 30 சதவீதமும் தள்ளுபடியை அறிவித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com