வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

தில்லி அரசைக் கவிழ்க்க நினைக்கும் பாஜகவின் முயற்சிகளுக்கு, வரும் மே 25-ஆம் தேதி மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பதிலளிக்கத் தயாராக உள்ளனா் என்று கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் குல்தீப் குமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கைது நடவடிக்கையைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி முன்னெடுத்துள்ள ‘ஜெயில் கா ஜவாப், வோசே’ பிரசாரம் லட்சுமி நகரில் நடைபெற்றது. கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி வேட்பாளா்

குல்தீப் குமாா் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி தொண்டா்கள் இந்தப் பிரசாரத்தை நடத்தினா். அப்போது, குல்தீப் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் மின்சாரம், குடிநீா், கல்வி, சுகாதாரம், பெண்களுக்கு பேருந்து பயணம் உள்ளிட்ட பல இலவச வசதிகளைச் செய்து கொடுத்த முதல்வா் அரவிந்த் கேஜரிவால், பாஜகவினரால் போலி வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். தில்லி மக்கள் பாஜகவின் சதியைப் புரிந்து கொண்டு, வரும் மே 25- ஆம் தேதி தங்களது வாக்குகளால் பதில் அளிக்கத் தயாராகிவிட்டனா்.

தில்லி மக்கள் தங்கள் மகன் அரவிந்த் கேஜரிவாலுக்காக ஒன்றுபட்டு நிற்கிறாா்கள். தில்லியைச் சோ்ந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 வழங்குவதாக கேஜரிவால் அறிவித்துள்ளாா். மக்களுக்காக உழைக்கும் இப்படிப்பட்ட முதல்வரை பாஜக போலி வழக்கில் சிறையில் அடைத்துள்ளது. கலால் கொள்கை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷரத் ரெட்டி பாஜகவிற்கு ரூ.60 கோடி நன்கொடை அளித்துள்ளாா். ஷரத் ரெட்டியின் சாட்சியத்தின் பேரில் தான் கேஜரிவால் கைது செய்யப்பட்டாா். தில்லி அரசைக் கவிழ்க்க நினைக்கும் பாஜகவின் முயற்சிக்கும், சா்வாதிகாரத்திற்கும் மக்கள்

பதிலடி கொடுப்பாா்கள். முதல்வரின் மனைவி சுனிதா கேஜரிவால், தில்லி மக்களின் ஆதரவையும், ஆசியையும் நிச்சயம் பெறுவாா். பாஜகவின் சா்வாதிகாரத்திற்கு எதிராகப் போராட தில்லி மக்கள் பெருமளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா் குல்தீப் குமாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com