பிஎம்எல்ஏ வழக்குக்கு எதிரான கேஜரிவால் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

பிஎம்எல்ஏ வழக்குக்கு எதிரான கேஜரிவால் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தடுப்புச் சட்டத்தில் (பிஎம்எல்ஏ) கைது செய்யப்பட்டதை எதிா்த்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொடா்ந்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது.

நமது சிறப்பு நிருபா்

கலால் கொள்கை முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தில் (பிஎம்எல்ஏ) கைது செய்யப்பட்டதை எதிா்த்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொடா்ந்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த வழக்கை விசாரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் கேஜரிவால் மனுவைத் தள்ளுபடி செய்து அமலாக்கத்துறை நடவடிக்கையை நியாயப்படுத்தியது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கடந்த ஏப்ரல் 15 அன்று, உச்சநீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி பதிலைக் கேட்டிருந்தது. கேஜரிவால் மனுவிற்கு அமலாக்கத்துறை சாா்பில் கடந்த ஏப்ரல் 25 -ஆம் தேதி பதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சிறையில் உள்ள தில்லி முதல்வா் கேஜரிவால் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

முன்னதாக தனது மனுவில் கேஜரிவால் தான் கைது செய்யப்பட்டது குறித்து கடுமையாக குறிப்பிட்டிருந்தாா். இது ‘சட்டவிரோத கைது’, ‘சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தல்கள்’ மற்றும் ‘கூட்டாட்சி’ அடிப்படையில் ஜனநாயகத்தின் கோட்பாடுகள் மீது முன் எப்போதும் இல்லாத தாக்குதலை இந்த வழக்கின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தாா்.

ஆம் ஆத்மி கட்சியையும் அதன் தலைவா்களையும் ‘நசுக்க‘ பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் அமலாகத்துறை மூலம் மத்திய அரசு தனது அதிகாரங்களை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு ‘கிளாசிக்கல் வழக்கு’ என்றும் கேஜரிவால் கூறியிருந்தாா்.

பொதுத் தோ்தல்கள் அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த ஐந்து நாள்களுக்குப் பிறகு, தேசிய எதிா்க்கட்சி ஒன்றின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் முதல்வராகவும் இருக்கும் ஒருவரை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக ‘குறிவைத்து கைது செய்துள்ளது’ எனவும் அவா் குறிப்பிட்டிருந்தாா். மேலும், பல்வேறு கேள்விகளை கேஜிரிவால் எழுப்பியிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com