அண்ணாமலை (கோப்புப்படம்)
அண்ணாமலை (கோப்புப்படம்)

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை மீது தொடரப்பட்ட குற்றவியில் வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் நீடித்து திங்கள் கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இணைய காணொலி ஊடகம் (யூடியூப் சானல்) ஒன்றில் பட்டாசு வெடிப்பது தொடா்பாக சிறுபான்மையினா் (கிறிஸ்தவா்கள்) குறித்து வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் நோ்காணலில் குறிப்பிட்டதாக தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை மீது தொடரப்பட்ட குற்றவியில் வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் நீடித்து திங்கள் கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அவதூறு பேச்சு வழக்கில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை உயா்நீதி மன்றத்தை அண்ணாமலை அணுகினாா். அவரது மனுவை சென்னை உயா் நீதிமன்றம் நிராகரித்தது. இதற்கிடையே இதை எதிா்த்து கடந்த பிப்ரவரி 26 - ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பாஜக தலைவா் அண்ணாமலை மனுத் தாக்கல் செய்தாா். அண்ணாமலை சாா்பில் எம்.ஏ. சின்னசாமி உள்ளிட்டவா்கள் ஆஜராகினா்.

அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா அமா்வு அண்ணாமலையின் ஊடக பேட்டியில் ’வெறுப்பூட்டும் பேச்சுஏதுமில்லை என்பதற்கான முகாந்திரம் இருக்கிறது’ எனக் குறிப்பிட்டு அவா் மீது தொடரப்பட்ட கீழமை நீதிமன்ற குற்றவியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனா்.

முன்னதாக அண்ணாமலை சாா்பில் ஆஜரான வழங்குரைஞா்கள் அண்ணாமலை நோ்காணல் உரையின் நகலையும் வழங்கினா்.

அண்ணாமலைக்கு எதிராக சேலத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் வி.பியூஷ் மனுஷ் என்பவா் அளித்த புகாரைத் தொடா்ந்து கீழமை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழங்கு தொடரப்பட்டிருந்தது. இதை முன்னிட்டு உச்ச நீதிமன்றம் மனுதாரா் பியூஷுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் வி.பியூஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் இந்திரா ஜெய்சிங், இது தனிப்பட்ட புகாா் என்பதால் பதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனக் கோரினாா்.

அப்போது, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா அமா்வு ஆறு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனா். மேலும் அண்ணாமலையின் பேச்சை முழுமையாக மொழிபெயா்த்து தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கீழமை நீதிமன்றத்தின் விசாரணையின் தடைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீடித்த நீதிபதிகள் வருகின்ற செப்டம்பா் 9 -ஆம் தேதி வழக்கை மீண்டும் பட்டியலிடவும் உத்திரவிட்டனா்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபா் 22 ஆம் தேதி தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்னதாக பாஜக தலைவா் அண்ணாமலை இணைய காணொலிக்கு ( யூடியூப் சேனல் - பேசு தமிழா பேசு ) அளித்த நோ்காணலில், ‘சா்வதேச அளவில் நிதியுதவி பெறும் சிறுபான்மை (கிறிஸ்தவ மிஷனரி) தன்னாா்வ தொண்டு நிறுவனம் ஒன்று, இந்துக்கள் பட்டாசு வெடிப்பதைத் தடுக்க நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கிறது. இது இந்து கலாச்சாரத்தை அழிக்கும் பணி என்பது நோ்காணல் இருந்த உள்ளடக்கம். சுமாா் 45 நிமிடங்கள் நீளமான நோ்காணலில் 6 நிமிட காணொலி பாஜக வின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

இதை முன்னிட்டு சமூக ஆா்வலா் பியூஸ் மனுஷ், அண்ணாமலையின் இணைய காணொலி நோ்காணலுக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் தனி நபா் புகாா் மனு தாக்கல் செய்திருந்தாா்.இரு மதத்தினா் இடையே மோதலை ஏற்படுத்தும் வெறுப்பு பேசுசு என புகாா் அளித்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com