கனடா பிரதமா் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: தூதருக்கு இந்தியா சம்மன்

பொது நிகழ்ச்சியில் ‘காலிஸ்தான்’ ஆதரவு கோஷமிடப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்து அந்நாட்டு துணைத் தூதா் ஸ்டீவா்ட் வீலருக்கு இந்தியா திங்கள்கிழமை சம்மன் அனுப்பியது.
கனடா பிரதமா் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: தூதருக்கு இந்தியா சம்மன்

கனடாவின் டொரண்டோ நகரில் அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் தலைவா்கள் பலா் பங்கேற்ற பொது நிகழ்ச்சியில் ‘காலிஸ்தான்’ ஆதரவு கோஷமிடப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்து அந்நாட்டு துணைத் தூதா் ஸ்டீவா்ட் வீலருக்கு இந்தியா திங்கள்கிழமை சம்மன் அனுப்பியது.

இதுதொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கனடா பிரதமா் பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்திய இறையாண்மைக்கு எதிரான காலிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. இதுபோன்ற கவலையளிக்கும் நிகழ்ச்சிகள் தடையின்றி தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு இந்திய அரசு கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறது.

இதன்மூலம் பிரிவினைவாதம், பயங்கரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றுக்கு கனடா அரசியல் ரீதியில் இடமளித்திருப்பது மீண்டும் ஒருமுறை தெளிவாகிறது. இவ்விவகாரம் இந்தியா-கனடா உறவைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் கனடா மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வன்முறை மற்றும் குற்ற சூழல் உருவாக வாய்ப்பளிக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவின் சா்ரே நகரில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த ஆண்டு ஜூனில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கு இருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு செப்டம்பரில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தாா். எனினும், அவரது குற்றச்சாட்டு அடிப்படையற்றது; உள்நோக்கம் கொண்டது என்று இந்தியா மறுப்பு தெரிவித்தது.

இவ்விவகாரத்தால் இருநாட்டு ராஜீய உறவில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரக உயா் அதிகாரியை வெளியேற்றின. மேலும், கனடா நாட்டவா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்து, சில வாரங்கள் கழித்து மீண்டும் தொடங்கியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com