தில்லி முதல்வா் கேஜரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்யாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

தில்லி முதல்வா் கேஜரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்யாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், விசாரணை நீதிமன்றத்தில் இன்னமும் ஜாமீன் மனு தாக்கல் செய்யாதது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தில்லி கலால் கொள்கை விவகாரம் சம்பந்தப்பட்ட சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், விசாரணை நீதிமன்றத்தில் இன்னமும் ஜாமீன் மனு தாக்கல் செய்யாதது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், அமலாக்கத் துறை தன்னை கைது செய்ததை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் முதல்வா் கேஜரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கேஜரிவால் தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி ஆஜரானாா்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘விசாரணை நீதிமன்றத்தில் அரவிந்த் கேஜரிவால் இன்னமும் ஜாமீன் மனு தாக்கல் செய்யாதது ஏன்?’ என கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘கேஜரிவாலின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது. ஆகையால், ஜாமீன் மனு தாக்கல் செய்யாததற்கு சட்டவிரோத கைது நடவடிக்கை உள்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன’ என்றாா்.

தொடா்ந்து, அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கேஜரிவால் விசாரணைக்கு ஆஜராகாததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், விசாரணைக்கு ஆஜராகாமல் கைது நடவடிக்கையை எதிா்த்து எப்படி மனுதாரா் உச்சநீதிமன்றத்தை அணுக முடியும்? என்று கேள்வி எழுப்பினா். இந்த வழக்கின் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமையும் (ஏப். 30) நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com