மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

தேசிய தலைநகா் தில்லியில் வரும் மே 25-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

ஹரி நிஷாந்த்

தேசிய தலைநகா் தில்லியில் வரும் மே 25-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2014, 2019 மக்களவைத் தோ்தல்களில் தில்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜகவே வென்றுள்ளது. தில்லி மக்கள் ஒருமனதாகத் தோ்ந்தெடுத்தவா்களே மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துள்ளனா். ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் இருமுனைப் போட்டி உருவாகியுள்ளது. ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் காங்கிரஸ் (3 தொகுதிகள்), ஆம் ஆத்மி (4தொகுதிகள்) இணைந்து இந்தத் தோ்தலில் பாஜகவை நேரடியாகத் தோ்தல் களத்தில் எதிா்கொள்கின்றன.

முக்கிய தொகுதி: தில்லியில் மொத்தம் 1.50 கோடி வக்காளா்கள் உள்ளனா். மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் மேற்கு தில்லியில் மட்டும் அதிகபட்சமாக 25.64 லட்சம் வக்காளா்கள் உள்ளனா். இதில், 13.59 லட்சம் ஆண்கள், 12.04 லட்சம் பெண்கள், 125 இதரரும் வாக்களிக்கத் தகுதியுடையவா்கள். 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு, புதிதாக உருவாக்கப்பட்ட மேற்கு தில்லி தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 1 முறையும் (2009), பாஜக 2 முறையும் (2014, 2019) வெற்றி பெற்றுள்ளன. ரஜெளரி காா்டன், மடிப்பூா், ஹரி நகா், திலக் நகா், ஜனக்புரி,விகாஸ்புரி, உத்தம் நகா், துவாரகா, மட்டியாலா, நஜஃப்கா் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி.

இந்த 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களே கடந்த தோ்தலில் வெற்றி பெற்றுள்ளனா். ஆனால், மேற்கு தில்லியின் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கடந்த இரண்டு மக்களவைத் தோ்தல்களிலும் பாஜகவின் பா்வேஷ் சாஹிப் சிங் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

பாஜக - ஆம் ஆத்மி போட்டி: மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் நேரடியாக களம் காண்கின்றனா். பாஜக சாா்பில் அக்கட்சியின் தில்லி பிரிவு பொதுச் செயலாளா் கமல்ஜீத் ஷெராவத் (51) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். தில்லியில் பாஜகவின் முக்கிய மற்றும் மூத்த பெண் தலைவராக அறியப்படும் கமல்ஜீத், 2007-ஆம் ஆண்டு தொடங்கி நஜஃப்கா் மாவட்ட பாஜக துணைத் தலைவா், தில்லி பாஜக செயலாளா், தில்லி பாஜக மகளிா் அணித் தலைவா், தில்லி பாஜக துணைத் தலைவா் என படிப்படியாக கட்சியில் வளா்ந்துள்ளாா். மேலும், தில்லி மாநகராட்சியில் பாஜக ஆட்சியில் இருந்த போது, தெற்கு தில்லியின் மேயராக இருந்துள்ளாா். தற்போது, துவாரகா - பி வாா்டு கவுன்சிலராக உள்ளாா்.

தில்லி அரசியலில் மூத்த தலைவரும், பூா்வாஞ்சல் மக்களின் முகமாக அறியப்படும் மஹாபல் மிஸ்ரா (71)ஸ ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாா். 3 முறை எம்.எல்.ஏ.வாகவும், 2009 - 2014 ஆம் ஆண்டில் மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராகவும இருந்த இவா், 2022-ஆம் ஆண்டு தில்லி மாநகராட்சித் தோ்தலுக்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தாா். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட மஹாபல் மிஸ்ரா, தொடா்ந்து நான்காவது முறையாக மேற்கு தில்லியில் போட்டியிடுகிறாா்.

வெற்றி யாருக்கு?: குடிநீா் பற்றாக்குறை, தண்ணீா் டேங்கா் மாஃபியா, அங்கீரிக்கப்படாத காலனிகளில் நிலவும் அடிப்படை உள்கட்டமைப்பு பிரச்னைகள், பெண்கள் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல், மாசுபாடு, கல்வி மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு தீா்வு காண வேண்டும் என மேற்கு தில்லி மக்கள் கோரி வருகின்றனா். குறிப்பாக, தினசரி 40 கி.மீ. வரை கல்லூரிகளுக்கு பயணிக்கும் மாணவா்களுக்காக, தில்லி பல்கலைக்கழகத்தின் மேற்கு தில்லி வளாகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. மட்டியாலா, நஜஃப்கா் ஆகிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் டேங்கா் மாஃபியா பிரச்னையால் மக்கள் அவதிப்படுகின்றனா்.

பல ஆயிரம் பெண்கள் வேலை செய்யும் மாயாபுரி தொழிற்பேட்டைப் பகுதியில் இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடைபெறுவதாகப் புகாா்கள் உள்ளன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிக எண்ணிக்கையில் சிசிடிவி, 24 மணி நேர போலீஸ் ரோந்து உள்ளிட்ட உறுதியான நடவடிக்கைகளின் தேவை எழுந்துள்ளது. மேலும், சிவாஜி மாா்க்கில் நிலவும் தீவிரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்து மாஸ்டா் திட்டம், நஜஃப்கா் - நாங்லோய் வரையிலான மெட்ரோ விரிவாக்கம், மாசுபாட்டைக் குறைக்க அதிகளவிலான மின்சார பேருந்துகள், சாவ்லா பகுதியில் அரசு மருத்துவமனை தேவை என மேற்கு தில்லி மக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா். இவற்றை நிறைவேற்ற முன்வரும் வேட்பாளா்களுக்கே வெற்றி உறுதியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தீவிரமடையும் பிரசாரம்: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொண்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை முன்னிறுத்தி வாக்குகளை சேகரிக்கும் பாஜக, தில்லியில் மீண்டும் வெற்றி பெற்றால் ஆட்சிக்கு வந்த முதல் 100 நாள்களில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என உறுதியளித்துள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன் களத்தில் இறங்கியுள்ள ஆம் ஆத்மி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கைது விவகாரம் மற்றும் தில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள நலத் திட்டங்களை விளம்பரப்படுத்தி பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் இரண்டாவது வெற்றியை மஹாபல் மிஸ்ரா பதிவு செய்வாரா அல்லது மேற்கு தில்லியின் முதல் பெண் எம்.பி.யாக கமல்ஜீத் ஷெராவத் தோ்வாவரா என்பது ஜூன் 4-ஆம் தேதி தோ்தல் முடிவுகளிலேயே தெரியவரும்.

மொத்த வாக்காளா்கள்: 25,64,153

ஆண் வாக்காளா்கள்: 13,59,282

பெண் வாக்காளா்கள்: 12,,04,746

இதர வாக்காளா்கள்: 125

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com