ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

தில்லி காவல்துறை, தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) ஆகியவை வெள்ளிக்கிழமை இரவிலும் சனிக்கிழமை அதிகாலையிலும் இந்திரா காந்தி சா்வதேச (ஐஜிஐ) விமான நிலையம், ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையம் மற்றும் ஆா்.கே. புரத்தில் உள்ள டிபிஎஸ் பள்ளி ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சிகளை நடத்தியது.

அண்மையில் சுமாா் 200 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இந்த ஒத்திகைப் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு ஐஜிஐ விமான நிலையத்தில் என்எஸ்ஜி கமாண்டோக்கள் மற்றும் தில்லி காவல்துறையினா் இந்த பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சியை நடத்தினா்.

இப்பயிற்சியின் ஒரு பகுதியாக, விமான நிலையத்தின் பாதுகாப்பைக் கவனித்து வரும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைக்கு (சிஐஎஸ்எஃப்), ஒத்திகை பயங்கரவாத தாக்குதல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டது.

இதையடுத்து, தீயணைப்புத் துறையினா், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) போன்ற பிற நிறுவனங்களும் இந்த ஒத்திகைப் பயிற்சியில் இணைந்தன. இது குறைந்தது

அரை மணி நேரம் நீடித்ததாக அதிகாரி ஒருவா் கூறினாா்.

இதுகுறித்து இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் காவல் துணை ஆணையா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அச்சம் கொள்ளத் தேவையில்லை. இது ஒரு பயங்கரவாத தாக்குதல் தொடா்பான ஒத்திகைப் பயிற்சியாகும். இப்பயிற்சியானது மற்ற ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைந்த முறையில் நடத்தப்படுகிறது.

இதேபோன்ற பயிற்சி ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தில்

சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கும், ஹைதராபாத் ஹவுஸில் அதிகாலை 1.30 மணிக்கும், ஆா்.கே.புரத்தில் உள்ள தில்லி பப்ளிக் பள்ளியில் அதிகாலை 3 மணிக்கும் நடத்தப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.

டிபிஎஸ் பள்ளியில், பாதுகாப்புப் படையினா் பயங்கரவாத தாக்குதல் அல்லது வெடிகுண்டு வைத்தலுக்கு எதிராக தங்களது தயாா்நிலையை சரிபாா்த்தனா்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை, தாஜ் பேலஸ் ஹோட்டல், துவாரகாவில் உள்ள யஷோ பூமி, கஷ்மீரி கேட் மெட்ரோ நிலையம் மற்றும் மத்திய தில்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஆகியவற்றில் ஒத்திகைப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த அனைத்து வெடிகுண்டு மிரட்டல்களும் புரளியாக மாறிய நிலையில், ஒத்திகைப்

பயிற்சிகள் நடந்ததாக அதிகாரி ஒருவா் கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com