செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

ஜாமீன் வழங்கக் கோரியும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் மே 15-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் வழங்கக் கோரியும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் மே 15-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.

இது தொடா்பான மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜால் புய்யான் தலைமையிலான அமா்வு கடந்த ஏப்ரல் 29- ஆம் தேதி விசாரித்தபோது, அமலாக்கத்துறையின் பதில் மனுவை படித்துப் பாா்க்க அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை மே 6-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனா்.

இந்நிலையில் இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான

மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் (சொலிசிட்டா் ஜெனரல்) துஷாா் மேத்தா, இந்த விவகாரத்தில் விரிவான வாதங்களை முன்வைக்க ஏதுவாக 5 நாள்கள் அவகாசம் கோரினாா். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த செந்தில் பாஜாஜி தரப்பு வழக்குரைஞா் அரிமா சுந்தரம், கடந்த 328 நாள்களுக்கு மேலாக செந்தில் பாலாஜி சிறையில் உள்ளாா். எனவே, அவரது மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரினாா். எனினும், அடுத்த விசாரணையை மே 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அமலாக்கதுறையின் பதில் மனுவுக்கு செந்தில் பாலாஜி தரப்பு விளக்க மனுவை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினா்.

பின்னணி: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது,

வேலை வழங்க லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குத் தொடா்ந்தது. அதில், கடந்தாண்டு ஜூன் 14-ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் 3,000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உயா்நீதிமன்றம் கடந்தாண்டு அக்டோபா் 19-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதேபோல, விசாரணை நீதிமன்றமும் மூன்று முறை அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தினமும் விசாரிக்க விசாரணை நீதிமன்றுத்துக்கு கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம்,அவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை செந்தில் பாலாஜி அணுகியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com