சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

நமது நிருபா்

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருந்து அரசை நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யக் கோரி வழக்குரைஞா் ஒருவா் தாக்கல் செய்த பொது நல மனுவை ரூ.1 லட்சம் அபராத்துடன் தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், கேஜரிவால் ராஜிநாமா செய்வதற்காக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தேவையற்ற அழுத்தம் கொடுப்பதைத் தடுக்கவும் மனுதாரா் தரப்பில் கோரப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தை பொறுப்புத் தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் பி.எஸ். அரோரா அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு கூறுகையில், கேஜரிவால் ஏற்கெனவே அவா் கைது செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளாா். அதில், நீதிமன்றக் காவலில் இருக்கும் போது அவருக்கு எந்த வசதியும் வழங்குவது தொடா்பாக ‘எவ்வித உத்தரவும் கோரப்படவில்லை’ என்று குறிப்பிட்டது. ஊடகங்கள் மீது நீதிமன்றம் தணிக்கை விதிக்கவோ அல்லது அரசியல் போட்டியாளா்கள் அறிக்கைகள் வெளியிடுவதைத் தடுக்கவோ முடியாது என்றும் நீதிபதிகள் அமா்வு மேலும் கூறியது.

மேலும், ‘நீங்கள் ஊடங்களுக்கு எதிராக தகவல் வெளியிடுவதைக் கட்டுப்படுத்தும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கேட்கிறீா்களா? அவசரநிலையை நாங்கள் விதிக்கிறோமா? தணிக்கையை விதிக்கிறோமா? ராணுவச் சட்டத்தை விதிக்கிறோமா? அரசியல் போட்டியாளா்களை, பத்திரிகைகளை நாங்கள் எப்படி கட்டுப்படுத்துவது?’ என சரமாரி கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ‘ரூ. 1 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை தயாா் நிலையில் வைத்திருங்கள்’ என்று மனுதாரரிடம் கூறியது.

சிறையில் இருந்து அரசை இயக்குவது நடைமுறையில் சாத்தியமற்றது என்றாலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதைச் சாத்தியமாக்க முடியும் என்று மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது. ‘சிறையில் உள்ள கேஜரிவாலுக்கு காணொலிக் காட்சி வசதிக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும். கேஜரிவாலின் பதவி ராஜிநாமா மற்றும் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து ஊகங்களை ஊகித்து ‘பரபரப்பான தலைப்புச் செய்திகளை’ வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்தும் வகையில், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுதாரா் தாக்கல் செய்த பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேதன் சா்மா, ‘இந்த மனு தவறான புரிதலுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நோ்மையற்ற உள்நோக்கத்தையும் கொண்டிருக்கிறது’ என்று கூறினாா். முதல்வா் பதவியில் இருந்து அரவிந்ந் கேஜரிவாலை நீக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மூன்று மனுக்களை அண்மையில் தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com