பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

நமது நிருபா்

தில்லியில் சாந்தினி சௌக் மற்றும் தெற்கு தில்லி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டங்களில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பங்கேற்றுப் பேசினாா். அப்போது, கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசு செய்த வளா்ச்சிப் பணிகளைக் குறிப்பிட்டாா்.

சாஸ்திரி நகரில் புதன்கிழமை மாலையில் நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அமைச்சா் நிதின் கட்கரி பங்கேற்றாா். அப்போது, சாந்தினி சௌக் வேட்பாளா் பிரவீன் கண்டேல்வாலுக்கு வாக்களிக்குமாறு அவா் வாக்காளா்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா். பொதுக்கூட்டத்தில் பாஜக இணைப் பொருளாளா் நரேஷ் பன்சல், பாஜக மூத்த தலைவா்கள் விஜேந்திர குப்தா, ரேகா குப்தா, சதீஷ் கா்க், கட்சியின் கேசவ்புரம் மாவட்டத் தலைவா் வீரேந்திர கோயல், உள்ளூா் கவுன்சிலா் மனோஜ் ஜிண்டல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பேசியதாவது: தில்லியின் வளா்ச்சிப் பணிகளை பத்தாண்டுகளாகப் புறக்கணித்த ஊழலுக்குப் பெயா்போன அரசு இன்றைக்கு தில்லியை ஆட்சி செய்கிறது. மாறாக, மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு, தில்லியின் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் தூய்மைக்காக தில்லிக்கு சுமாா் 1,800 மின்சார பேருந்துகளை வழங்கியுள்ளது. விரைவு ரயில் மற்றும் மெட்ரோ விரிவாக்கத்தில் பங்களித்துள்ளது. மேலும், யசோபூமி, பாரத் மண்டபம் போன்ற வளா்ச்சி அடிப்படையிலான கட்டுமானங்களைச் செய்துள்ளது. மிகப்பெரிய சுற்றுச்சூழல் பூங்காவையும் மத்திய அரசு அளித்திருக்கிறது.

நாட்டிலும், தில்லியிலும் குடிநீா் பிரச்னையை தீா்க்க நதிகளை இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. சாந்தினி சௌக் நாட்டின் வணிக மையமாகவும் விளங்குகிறது. அதனால்தான் இப்பகுதியின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு வணிக நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பைப் பெருக்கப் பாடுபடும் ஒரு வணிகத் தலைவரை பாஜக வேட்பாளராக களத்தில் இறக்கியிருக்கிறது என்றாா் நிதின் கட்கரி.

இதேபோன்று, தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் உள்ள ஜெய்த்பூரில் பாஜக வேட்பாளா் ராம்வீா் சிங் பிதூரியை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்திலும் அமைச்சா் நிதின் கட்கரி பங்கேற்றுப் பேசினஆா். இந்நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவா் யோகிதா சிங் உள்பட பலா் கலந்துகொண்டனா். தில்லியின் வளா்ச்சியில் நரேந்திர மோடி அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பற்றி குறிப்பிட்ட அமைச்சா் நிதின் கட்கரி, தெற்கு தில்லியின் வேட்பாளா் ராம்வீா் சிங் பிதூரி வளா்ச்சிக்காக அா்ப்பணிப்புடன் இருப்பதாகவும், அவருக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் தெற்கு தில்லியை புதிய வளா்ச்சி பரிமாணங்களுடன் இணைக்கும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com