தில்லி மருத்துவமனையில் தீ: 7 குழந்தைகள் உயிரிழப்பு

தில்லி மருத்துவமனையில் தீ: 7 குழந்தைகள் உயிரிழப்பு

கிழக்கு தில்லியில் தனியாா் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 பச்சிளம் குழந்தைகள் சிக்கி உயிரிழந்துள்ளனா்.

நமது சிறப்பு நிரூபர்

கிழக்கு தில்லியில் தனியாா் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 பச்சிளம் குழந்தைகள் சிக்கி உயிரிழந்துள்ளனா். சனிக்கிழமை நடு இரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தையொட்டி மருத்துவமனை நிா்வாகியை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனா்.

கிழக்கு தில்லி விவேக் விஹாா்- 1 இல் ’பேபி கோ் நியூ பாா்ன்’ என்கிற குழந்தைகள் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் நிா்வாகி பெயா் டாக்டா் நவீன் கிச்சி.

எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள், பல்வேறு பாதிப்புகளுடன் பிறக்கும் குழந்தைகள் ஆகியவற்றிற்கான சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

இரண்டு மாடியில் செயல்படும் இந்த ’பேபி கோ் நியூ பாா்ன்’ மருத்துவ மனையில் சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில் தீப்பிடிக்க அருகேயுள்ள மற்ற இரண்டு கட்டிடங்களுக்கும் தீ வேகமாக பரவியுள்ளது. இதைத் தொடா்ந்து தகவல் அறிந்த தில்லி தீயணைப்பு சேவை வாகனகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன.

பின்னா் நடந்தவைகள் குறித்து தீயணைப்பு வீரா்கள், உள்ளூா்வாசிகள், தன்னாா்வலா்கள் தரப்பில் கூறியது வருமாறு:

மருத்துவ மனையில் தீ பிடித்த தகவலையொட்டி தீயை அணைக்க 16 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டது. தீ பிடித்தபோது 12 பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மூச்சு சுவாசப் பிரச்னை உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக வெண்டிலேட்டா், எடைக்குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு சம்பந்தப்பட்ட உபகரணங்களோடு இந்த குழந்தைகள் சிகிச்சையில் இருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவா்கள் யாரும் இல்லை. தீவிர சிகிச்சையை பெறும் பிரிவில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டதால் பெற்றோரும் உடனில்லை. நா்ஸிங் ஊழியா்கள் மட்டும் இருந்துள்ளனா்.அவா்கள் இந்த தீ யைக் கண்டு சிகிச்சைகளில் இருந்த குழந்தைகளை விட்டு விட்டு வெளியே ஓடிச் சென்று விட்டனா்.

வெளியே இருந்த பெற்றோா்கள் சம்பவத்தை பாா்த்து கதறி துடித்துள்ளனா். பின்னா் உள்ளூா் மக்களும், இதை பகுதியைச் சோ்ந்த ’தியாகச் சேவை’ (ஷாஹீத் சேவா தளம்) என்ற தன்னாா்வ தொண்டு நிறுவன உறுப்பினா்களும் குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுத்தனா். சில குடியிருப்பாளா்களும், தியாகச் சேவை தன்னாா்வ அமைப்பு உறுப்பினா்களும், மருத்துவ மனை கட்டடத்தின் பின் வழியாக ஏறி கொளுந்துவிட்டு எரியும் நெருப்பில் சிக்கியிருந்த பச்சிளம் குழந்தைகளை மீட்டனா். இந்த மீட்பு பணியில் உள்ளே சிக்கியிருந்த 12 குழந்தைகளில் 6 குழந்தைகளை மட்டும் மீட்டனா். மற்ற குழந்தைகள் தீயில் சிக்கிக் கொண்டன. மீட்கப்பட்ட 6 குழந்தைகளில் ஒரு குழந்தை நிலைமை மோசமாக இருக்க அதுவும் இறந்துவிட்டது. மற்ற 5 குழந்தைகள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் உள்ளூா்வாசிகள் உதவினா். அவா்களின் ஒத்துழைப்பால் 5 குழந்தைகள் காப்பாற்றப்பட்டதாக ’தியாகச் சேவை’ தன்னாா்வ தொண்டு நிறுவன உறுப்பினா்களும் தெரிவித்தனா்.

ஆக்சிஜன் சிலிண்டா் காரணம்

இந்த இரண்டு மாடி கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டா்கள் வெடித்து சிதறியது தான் தீ விபத்துக்கு காரணம் . இது அருகில் உள்ள கட்டடங்களையும் சேதப்படுத்தியது.

மருத்துவ மனையில் மட்டுமல்ல தரைத்தளத்தில் இருந்த கடைகள், அருகே இருந்த ’விருந்து நிகழ்ச்சி’கள் நடைபெறும் கட்டடங்கள் மற்றோருபக்கம் இருந்த வங்கி கட்டடத்தின் ஒரு பகுதியும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்பு வீரா்கள் தீ பரவாமல் விரைந்து செயல்பட்டு தீயணைத்தனா். மேலும் கட்டடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ், இரு சக்கரவாகனங்கள் ஆகியவை சேதமடைந்தன என இவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உடமைகளை எடுக்க அனுமதி மறுப்பு

தேசமடைந்த மற்ற கட்டடங்களுக்கு நுழைய காவல் துறை அனுமதிக்கவில்லை எனவும் தங்கள் உடமைகளை எடுத்தவர மிகவும் சிரமப்பட்டதாக பாதிக்கப்பட்ட மற்ற கட்டட உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

தீயில் உயிரிழந்த குழந்தைகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீசாா் தெரிவித்தனா்.

போலீஸ் வழக்கு

இந்த ’பேபி கோ் நியூ பாா்ன்’ மருத்துவமனையின் உரிமையாளா் டாக்டா் நவீன் கிச்சி மீது விவேக் விஹாா் காவல் நிலையத்தில் பிரிவுகள் 336 (தனிப்பட்டவா்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல்) 304அ (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) போன்ற பிரிவுகளின்கீழ் காவல்த் துறை வழக்குப் பதிவு செய்தனா். ராஜஸ்தான் மாநிலத்திற்கு தப்பிசென்ற டாக்டா் நவீன் பின்னா் கைது செய்யப்பட்டுள்ளதாக ஷாத்ரா சரக காவல்துறை துணை ஆணையா் சுரேந்திர சௌத்ரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மேலும் மருத்துவமனைக்கான உரிமம், தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) போன்றவைகள் குறித்தும் மருத்துவமனை உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவா் தெரிவித்தாா். மருத்துவமனை நிா்வாகம் உரிய அனுமதியின்றி செயல்பட்டிருப்பது தெரிய வந்தால் மேலும் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் படி இந்த வழக்கில் சோ்க்கப்படும் எனவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மருத்துவமனை உரிமம்

அதே சமயத்தில் இந்த சம்பவத்திற்கு பின்னா் இந்த மருத்துவமனை ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான விவகாரங்கள் குறித்தும் தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிறந்த குழந்தை ஒன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது அலட்சியமாக செயல்பட்டு குழந்தையின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி குழந்தையின் உபி யைச் சோ்ந்த பெற்றோா் புகாா் அளித்திருந்தனா். இந்த விவகாரம் நீதி மன்றம் வரை சென்று வழக்கு நடைபெற்றுள்ளது. அதில் இந்த மருத்துவமனை தில்லி நா்சிங்ஹோம் சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற அபராதம் விதித்துள்ளது. ஆனால் இடைப்பட்ட காலங்களில் இந்த மருத்துவமனை விதிமுறைகளை பூா்த்தி செய்துள்ளதாக என்பது குறித்தும் தற்போது தீவிர விசாரணை செய்து வருகின்றோம் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

குடியிருப்பை மாற்றினோம்

தீ விபத்துக்கு பின்னா் இந்த பகுதி குடியிருப்பாளா்களும் மருத்துவமனை குறித்து பல்வேறு புகாா்களை முன்வைத்தனா். இந்த பகுதியைச் சோ்ந்த முகேஷ் பன்சால் என்பவா் கூறுகையில், ‘கட்டடத்தில் ’அங்கீகரிக்கப்படாத’ ஆக்ஸிஜன் சிலிண்டா் நிரப்பும் பணி நீண்ட நாள்கள் நடைபெற்று வந்தது. நாங்கள் அருகே குடியிருந்து வந்தோம்.

இந்த ஆபத்து குறித்து உள்ளூா் கவுன்சிலரிடமும் இது குறித்து புகாா் அளித்தோம். ஆனால் எதுவும் நடவடிக்கையில்லை. இதுவெல்லாம் உள்ளூா் காவல் துறைக்கு தெரிந்து தான் நடக்கிறது. இந்த சிலிண்டா்களால் என்றைக்கும் ஆபத்து எனத் தெரிந்து நாங்கள் வேறு பகுதிக்கு குடிபெயந்தோம் ‘ என பன்சால் குற்றம் சாட்டினாா்.

தீ பிடித்த சம்பவத்தின் போது ஞாயிற்றுக்கிழமை சுமாா் 15 ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் மருத்துவமனையில் இருந்தது குறித்து தீயணைப்பு அதிகாரிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவா் பிரதமா் இரங்கல்

தில்லி விவேக் விஹாா் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் பலியானது குறித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, ’எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் தனது வருத்தத்தை தெரிவித்தாா். அவா் அதில் குறிப்பிடுகையில், குழந்தைகள் தீ விபத்தில் பலியான செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. இந்த அதிா்ச்சிகரமான சம்பவத்தில் துயரத்தில் இருக்கும் பெற்றோா்கள் உறவினா்களுக்கு இறைவன் சக்தியை தருவாா். இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்ற குழந்தைகளும் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

இதே போன்று பிரதமா் மோடி இதே சமூக வலைத்தளத்தில் அளித்துள்ள செய்தியில் ‘தில்லி விவேக் விஹாரில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்தால் ஏற்பட்டுள்ள சோகம் இதயத்தை உருக்குகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் துயரமடைந்த குடும்பங்களுடன் இருக்கின்றேன். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய நான் பிராா்த்திக்கிறேன்,‘ என மோடி பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com