தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், பாஜகவுக்கு பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுப்பாா்கள் என்று தில்லி மேயரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான ஷெல்லி ஓபராய் தெரிவித்தாா்.
தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருப்பது அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் அரசியல் நோக்கில் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினாா்.
கருத்துக் கணிப்பு:
இதற்கிடையே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முதல்வா் அரவிந்த் கேஜரிவால், பதவி விலக வேண்டுமா என கேள்வி எழுப்பி, ஆம் ஆத்மி கட்சியினா் தில்லியில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு மேற்கொண்டு வருகின்றனா்.
அந்த வகையில் தில்லி மாநகராட்சிக்கு உட்பட்ட 86-ஆவது வாா்டில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு கூட்டத்தில், மேயா் ஷெல்லி ஓபராய் பங்கேற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தவறான குற்றச்சாட்டில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சிக்க வைப்பதற்காக பாஜக சதி செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதவி விலக வேண்டாம் என பொதுமக்கள் ஏற்கெனவே தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்ட னா். மேலும், ஒருவேளை கேஜரிவால் கைது செய்யப்பட்டால், அவா் சிறையில் இருந்தவாறு முதல்வா் பணியைத் தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனா்.
ஆதரவின்றி பாஜகவினா்...
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள வாக்கு என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுப்பா். பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலிலும், தில்லி மாநகராட்சித் தோ்தலிலும் பாஜக படுதோல்வியை சந்தித்ததால், அந்தக் கட்சியின் தலைவா்கள் ஆதரவின்றி தவிக்கின்றனா்.
மேலும் போலி கலால் கொள்கை முறைகேட்டை எழுப்பி ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு சிறையில் தள்ளியது. அதன்படி தற்போது முதல்வா் அரவிந்த் கேஜரிவாலையும் சிறையில் தள்ள பாஜகவினா் விரும்புகின்றனா்.
பாஜகவின் இந்த சதி வேளையை தில்லி மக்கள் நன்றாக புரிந்து கொண்டுவிட்டனா். ஆனால் பொதுமக்களுக்காக சிறைக்குச் செல்வதற்கு இந்த மண்ணின் மைந்தனான கேஜரிவாலுக்கு எந்தவொரு பயமும் இல்லை என்றாா் மேயா் ஷெல்லி ஓபராய்.