தென்காசி, நவ. 16: கிராமப்புற பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் களையவும் ஏற்படுத்தப்பட்ட நடமாடும் மகளிர் ஆலோசனைகுழு திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மகளிர் காவல்நிலைய போலீஸôர் கிராம பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, பெண்களுக்கு உள்ள சட்டரீதியான பிரச்னைகளை கேட்டறிந்து அவற்றை நீக்கவும், சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட குழுவே நடமாடும் மகளிர் ஆலோசனைக் குழு.
பெண் சிசுக் கொலை, வரதட்சிணைக் கொடுமை, பெண்களை கிண்டல் செய்தல், மாமனார், மாமியார் கொடுமை, கணவன் - மனைவி இடையே ஏற்படும் சாதாரண பிரச்னை காரணமாக விவாகரத்து வரை செல்லும் மனோபாவம் போன்ற பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தொடக்கத்திலேயே களைந்து அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆட்சியில் இக் குழு அமைக்கப்பட்டது.
மகளிர் காவல் உதவி ஆய்வாளர், கூட்டம் நடைபெறும் பகுதியைச் சேர்ந்த காவல்நிலைய ஆய்வாளர், வழக்கறிஞர், சமூக
ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், மகளிர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், மற்றும் கூட்டம் நடைபெறும் பகுதியைச் சேர்ந்த பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்டோர் இக் குழுவில் இருப்பர்.
வாரத்திற்கு ஒருமுறை நடைபெறும் இக் கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு தங்களுடைய பிரச்னைகள் குறித்து மனுக்களை அளிப்பர். மனுக்களின் மீது அங்கேயே விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வுகளும் காணப்பட்டன. இதனால்,
தொடக்க காலத்தில் இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு நிலவியது.
ஆனால், தற்போது இதுபோன்ற கூட்டம் நடைபெறுவதில்லை. அவ்வாறு நடத்தப்பட்டாலும் பெயரளவிற்கு நடத்தப்பட்டு, ஏடுகளில் பதிவு செய்துவிட்டு திரும்பிவிடுகின்றனர்.
"ஒரு பகுதியில் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெறுகிறது என்றால், இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கு விளம்பரம் செய்ய வேண்டும். மேலும், கூட்டத்திற்கு ஆகும் செலவினங்களை அரசு அனுமதிப்பதில்லை' என்று காரணம் கூறுகின்றனர் காவல் அதிகாரிகள் சிலர்.
"கூட்டம் நடைபெறும் அன்று காவல்துறை அதிகாரிகள் கலந்துகொள்வதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. காவலர்கள் பற்றாக்குறை போன்றவையும் அதில் அடக்கம்.
ஒவ்வொரு முறை கூட்டம் நடத்துவதற்கும் அப் பகுதியின் ஊராட்சி அல்லது பேரூராட்சித் தலைவர்தான் அனைத்து செலவினங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அனைத்துக்கும் மேலாக இதுபோன்ற கூட்டங்கள் யாருக்காக நடத்தப்படுகிறதோ, அவர்கள் பெரும்பான்மையாக கலந்துகொள்வதில்லை' என்றும் தெரிவித்தனர் அந்த அதிகாரிகள்.
ஆலோசனைக் குழு கூட்டத்தின்
உறுப்பினர் ஒருவர் கூறும்போது, காவல் துறையினர் பொதுமக்களிடமிருந்து பெறும் ஒவ்வொரு மனுக்களையும் புகார் போன்றே பரிசீலனை செய்கின்றனர்.
இதனால், மேலும் பிரச்னை வலுப்பெறவே செய்கிறது. பிரச்னைக்குரியவர்களை அழைத்து உணர்வுபூர்வமாகப் பேசி, அங்கேயே சுமுக தீர்வு காண வேண்டும்.
புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்நிலையத்திற்கு அலையவைக்கக் கூடாது என்று மேலும் கூறினார் அவர்.
பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தும் அரசு, அவற்றை சீரியமுறையில் செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.