அரசு உத்தரவை மீறும் பள்ளிகள்: நெருக்கடியில் மாணவ, மாணவிகள்

தென்காசி, ஏப். 13:    அரசின் உத்தரவை மீறி பள்ளிகள் கோடைவிடுமுறையில் சிறப்பு வகுப்புகளைத் தொடர்ந்து நடத்துகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் மட்டுமன்றி பெற்றோர்களும் துயருறும் நிலை ஏற்பட்டுள்ளது.  தமிழகம் ம
Updated on
1 min read

தென்காசி, ஏப். 13:    அரசின் உத்தரவை மீறி பள்ளிகள் கோடைவிடுமுறையில் சிறப்பு வகுப்புகளைத் தொடர்ந்து நடத்துகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் மட்டுமன்றி பெற்றோர்களும் துயருறும் நிலை ஏற்பட்டுள்ளது.

 தமிழகம் முழுவதும் மெட்ரிக், மாநிலவழிகல்வி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப்பட்டுவிட்டது. மற்ற வகுப்புகளுக்கும் பெரும்பாலும் தேர்வுகள் முடிவடைந்து விட்டன.

 கோடைகாலங்களில் எளிதில் கோடைநோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாலும், அடுத்த கல்விஆண்டில் படிப்பதற்கு ஏதுவாக புத்துணர்ச்சியுடன் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கும் தான் கோடைகால விடுமுறை அளிக்கப்படுகிறது.

 கோடை விடுமுறையில் ஏற்கெனவே பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை, சிறப்புப் பயிற்சி என்று ஹிந்தி வகுப்புகள், கணினி பயிற்சி, நீச்சல் பயிற்சி, என பல்வேறு பயிற்சிகளில் சேர்த்து விடுகின்றனர்.

 இந்நிலையில் தனியார் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் தங்களுடைய மாணவ, மாணவிகள் தேர்வில் அதிகம் தேர்ச்சிபெற வேண்டும் என்பதற்காகவும், மாவட்ட, மாநில அளவில் முதல் மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்பதற்காகவும், கடந்த ஆண்டு வகுப்புகள் முடிவடைந்தவுடன் விடுமுறை அளிக்காமல் 10மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பாடங்களை நடத்தத் துவங்கிவிட்டனர்.

 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆனாலும், அரசு விடுமுறை நாள்கள் எதுவாக இருந்தாலும் சிறப்பு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

 இதற்கு சில அரசுப் பள்ளிகளும் விதிவிலக்கல்ல. அவ்வாறு சிறப்பு வகுப்புகளுக்கு செல்லாத மாணவ, மாணவிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு அஞ்சி மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்குச் செல்கின்றனர். இதனால் கல்வியின் மீது மாணவ, மாணவிகளுக்கு தேவையற்ற அச்சமும், வெறுப்பும் ஏற்படுகிறது.

 சில பள்ளிகளில் காலையில் 7 மணிக்கே வகுப்புகளைத் துவங்குகின்றனர். இதனால் மாணவர்கள் மட்டுமன்றி அவர்களுடைய பெற்றோர்களும் தினந்தோறும் துயருகின்றனர்.  இவற்றையெல்லாம் விட, சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பிலிருந்து 2-ம் வகுப்பு செல்லும் குழந்தைகளுக்கும் விடுமுறை அளிக்காமல், இப்போதே வகுப்புகளை நடத்த துவங்கி விட்டனர் என்பது மிகவும் வேதனையான விஷயம்.

 கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு, கோடை விடுமுறையில் வகுப்புகளை நடத்தக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்திருந்தது.

 ஆனால் அந்த எச்சரிக்கையை மீறி தொடர்ந்து தனியார் பள்ளிகளும், அரசுப் பள்ளிகளும்கூட சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஆய்வாளர்கள் ஆய்வுகளை, நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com