தென்காசி, ஏப்.20: மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலம் மலைப் பகுதியில் அவ்வப்போது ஏற்படும் தீவிபத்து காரணமாக அரிய வகை மூலிகையினங்களும், விலங்கினங்களும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென்னகத்தின் "ஸ்பா' என்றழைக்கப்படும் குற்றாலத்தின் வனச்சரக பகுதி, பழைய குற்றாலம் மலைப் பகுதியில் துவங்கி, திருமலைக்கோவில் வரை 6919 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இந்தப் பகுதியில்தான் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் அமைந்துள்ளன.
மற்ற பகுதிகளில் பார்ப்பதற்கு அழகான அருவிகள் இருந்தாலும், இங்குபோன்று பகலிலும், இரவிலும் அனைவரும் குளித்து மகிழக் கூடிய அருவிகள் எங்கும் இல்லை என்பது தனிச் சிறப்பு. மேலும், இந்த அருவிகளில் குளிப்பதால் உள்ளத்திற்கு மகிழ்ச்சியும், உடலுக்கு புத்துணர்வும் கிடைக்கும் என்றால் அது மிகையாகாது. அதற்கு காரணம் அருவிகளில் விழும் தண்ணீர், ஆயிரக்கணக்கான மூலிகைகள் மற்றும் தாவரங்களின் மீது ஓடி அருவிகளில் கொட்டுவதுதான்.
குற்றாலம் மலைப் பகுதியில் அகத்தி, அத்தி, அமிர்தவல்லி, அரணை, அழகுக்கண்ணி, அறுகு, ஆடாதொடை, ஆதண்டம், இலவங்கபட்டை, இண்டு, இலந்தை, கடுக்காய், கண்டங்கத்திரி, கருநொச்சி, கருவமரம், ஊமத்தை, கொடிவலி, சதுரக்கள்ளி, சர்ப்பகந்தி, காட்டுசீரகம், கற்றாழை, கல்துளசி, கல்தாமரை, நாகவல்லி, நாகதாழி, செம்பை, செம்பருத்தி, சிறியாநங்கை, சிராப்பிலை, வசம்பு, நிலஅவரை, பொன்ஊமத்தை, மஞ்சள்கொடி, பேரரத்தை, பேய்துளசி, பெரியாநங்கை, நீலம் சங்குபுஷ்பம் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளும், தாவர வகைகளும் உள்ளன.
யானை, மிளா, கரடி மற்றும் மான்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதுதவிர, பட்டியலில் இனம் காணப்பட்டுள்ள அரிய வகை இனமான சருகுமான், வரையாடு, கேழைஆடு, பறக்கும் அணில், மரநாய் மற்றும் சிறுத்தைகளும் காணப்படுகின்றன.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குற்றாலம் மற்றும் பழைய குற்றாலம் மலைப் பகுதியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தீவிபத்தின் காரணமாக அரிய வகை மூலிகையினங்கள் அழிந்து வருகின்றன. மேலும், வனவிலங்குகளும் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் ஊர்ப்பகுதிக்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று, ஐந்தருவிச் சாலையில் உள்ள ஒரு வீட்டில் நாயை பிடித்துச் சென்றது. கடந்த மாதம் மிளா மற்றும் குட்டிகள் குற்றாலம் வனத்துறை அலுவலகம் அருகே மேய்ந்துகொண்டிருந்தபோது, வாகனங்களின் சப்தம் கேட்டு பதறியடித்து ஓடியதில் ஒரு மிளா சுவரில் மோதி விழுந்து இறந்தது.
இதுவரையிலும் வெளியே வராத கேழைஆடு கடந்த ஆண்டு சீசனின்போது, குற்றாலம் பேரருவியில் விழுந்து உயிரிழந்தது.
கடந்த ஆண்டில் குற்றாலம் மலைப் பகுதியில் மட்டும் 8 தீவிபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதுதொடர்பாக ஒருவரை வனத் துறையினர் கைது செய்தனர். அண்மையில் சில தினங்களுக்கு முன்பு குற்றாலம் மலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளமான ஹெக்டேர் பரப்பளவில் தீப்பிடித்து எரிந்தது.
6919 ஹெக்டேர் பரப்பளவைப் பாதுகாக்கும் பணியில் 10 வனக் காப்பாளர்களும், 10 வனக் காவலர்களும், இரண்டு வனவர்களும், ஒரு ரேஞ்சரும் ஈடுபட்டுள்ளனர். கோடைக் காலத்தில் மூன்று மாதங்களுக்கு மட்டும் தீதடுப்பு காவலர்கள் 10 பேர் தாற்காலிக பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களைத் தவிர வேட்டைத் தடுப்பு காவலர்கள் 10 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மலையின் மீது தீப்பிடிக்க துவங்கி வனத்துறையினருக்கு தெரிந்து சம்பவ இடத்தை அடைவதற்கு குறைந்தபட்சம் 3 முதல் 4 நான்கு மணி நேரம் ஆகிறது. இதற்குள் தீ மிக வேகமாகப் பரவிவிடுகிறது. தீப்பிடித்த பகுதிக்குச் சென்று அப் பகுதியில் உள்ள பசுமையான செடிகொடிகளைப் பிடுங்கி அதனை வைத்தே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதனால், தீயை அணைக்கும் பணி தாமதமாகிறது.
தொடரும் தீவிபத்துகள் குறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, மலைப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டுகள் ஏராளம் உள்ளன. அங்கு வேலைக்குச் செல்பவர்கள், இரவில் தங்குபவர்கள் தீவைத்துவிட்டு வந்துவிடுகின்றனர். இதனைத் தவிர்க்க முழுமையாகப் பாடுபட்டு வருகிறோம் என்றனர்.
அரியவகை மூலிகைகள் மற்றும் விலங்கினங்களைக் கொண்டுள்ள குற்றாலம் மலைப் பகுதியை முழுமையாகப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.