தாமதமாகும் உணவு பாதுகாப்பு சட்ட அமல்: தவிக்கும் சுகாதாரத் துறை

திருநெல்வேலி, பிப். 23:   கலப்படத்தைத் தடுக்க புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு சட்ட அமல் தாமதமடைவது சுகாதாரத் துறையினரிடம் தவிப்பை ஏற்படுத்தியுள்ளது.   கலப்படத்தைக் கட்டுபடுத்தவும், இந்திய
Updated on
2 min read

திருநெல்வேலி, பிப். 23:   கலப்படத்தைத் தடுக்க புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு சட்ட அமல் தாமதமடைவது சுகாதாரத் துறையினரிடம் தவிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கலப்படத்தைக் கட்டுபடுத்தவும், இந்திய உணவுகளை உலகத் தரத்துக்கு இணையாக உயர்த்தவும் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என சமுதாய ஆர்வலர்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக் கோரிக்கையை நிறைவேற்றும்விதமாக, புதிதாக "உணவு பாதுகாப்பு சட்டம்' 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

  இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, அதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதன் மூலம் கலப்படத்தைப் பெருமளவு தடுக்க முடியும் என கூறப்படுகிறது.  தற்போதுள்ள உணவு கலப்பட தடைச் சட்டத்தில் தண்டனைகள் குறைவாக உள்ளதாகவும், அனைத்து வகை குற்றங்களுக்கும் ஒரேவகையான தண்டனைகள் இருப்பதாகவும் சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.  இக் குறைகள், உணவு பாதுகாப்பு சட்டத்தில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இச் சட்டத்தில் "லேபிள்' தவறு, உயிருக்கு ஆபத்தில்லா கலப்படம், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கலப்படம், உயிர் இழப்பு ஏற்படுத்தும் கலப்படம் என குற்றங்கள் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  ஒரு குற்றத்தின் அளவைப் பொருத்து, அதற்குத் தனியாக தண்டனை வழங்கப்படும். ஒரு உணவு பொருளின் லேபிள் தவறாகவோ, முறைகேடாகவோ இருந்ததால், அதற்கு ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். உயிருக்கு ஆபத்தில்லா கலப்படத்துக்கு குறைபட்ச தண்டனையாக 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் வழங்கப்படும்.

  உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய அளவுக்கு கலப்படம் இருந்தால், 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கலப்படப் பொருளால் ஒருவர் இறந்துவிட்டால், எதிரிக்கு ஆயுள் தண்டனையையும், ரூ.10 லட்சம் அபராதத்தையும் நீதிமன்றத்தில் பெற்றுத் தர இச் சட்டம் வழிவகை செய்கிறது.

  ஆனால் தற்போதுள்ள உணவு கலப்பட தடைச் சட்டத்தில் தவறான லேபிள், உயிருக்கு ஆபத்தில்லா கலப்படம், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய கலப்படம் என அனைத்துக்கும் ஒரே வகையான தண்டனையே உள்ளது. அதிலும் சில பிரிவுகளில் குறைந்த அளவு அபராத தொகையே தண்டனையாக உள்ளது.

  இதன் காரணமாக கலப்படம் செய்வோருக்கு தண்டனை மீதோ, அரசு மீதோ பயம் இல்லை என்று சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர். இதன் விளைவாக கடந்த காலங்களைவிட, தற்போது பொருள்களின் தரம் குறைந்து வருகிறது. மேலும் கலப்படம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

  இச் சூழ்நிலையில்தான் புதிதாக உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவதாக அரசு அறிவித்து, அதற்கு 2006 ஆம் ஆண்டு முழு உருவம் கொடுத்தது. ஆனால் மூன்று ஆண்டுகளாகியும் இந்தச் சட்டம் இன்னும் அமலாகாமல் இருப்பது சுகாதாரத் துறைனரிடையே அதிருப்தியையும், மனச் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

  இச் சட்டத்துக்கு மக்களவையிலும், குடியரசுத் தலைவரிடமும் ஒப்புதல் கிடைத்துவிட்ட நிலையில், அதை செயல்படுத்தாமல் மத்திய அரசு இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது.

  தற்போது உள்ள "உணவு கலப்பட தடைச் சட்டம்' 1954 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 1955 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.   பெருகி வரும் கலப்படத்தைத் தடுக்கவும், அப் பொருள்களால் பாதிக்கப்படும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் இச் சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

ஒருநாள் ஒத்திகை

உணவு பாதுகாப்பு சட்டம் திடீரென செயல்பாட்டுக்கு வரும் சூழ்நிலை இருப்பதாக கருதும் தமிழக சுகாதாரத் துறை, அதற்குரிய நடவடிக்கைகளை கடந்த 8 மாதங்களாக எடுத்து வருகிறது.

  குறிப்பாக, உணவு ஆய்வாளர்களும், சுகாதார ஆய்வாளர்களும் முழு அளவில் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர். 50 ஆயிரம் பேருக்கு ஒரு உணவு ஆய்வாளர் என்ற ரீதியில் உணவு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

  இதற்காக சுகாதாரத் துறையின் இதர பிரிவுகளில் பணிபுரியும் உணவு கலப்படத்தைத் தடுக்கும் ஆர்வமுள்ள ஆய்வாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்பகிறது. மேலும் உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னோட்டமாக, சில மாதங்களாக சுகாதாரத் துறை திடீர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

  இதன் ஒரு பகுதியாகத்தான் சில மாதங்களாக மாதம் ஒரு நாள் ஒரு பொருள் என்ற அடிப்படையில், ஒரு நாள் முழுவதும் மாநிலத்தில் அனைத்துப் பகுதியிலும் அந்த பொருள் மீது திடீர் சோதனை நடத்தப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர்,

இந்த திடீர் சோதனையின் மூலம் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com