ஓட்டுநர் உரிமம் எடுப்பவர்களுக்கு விபத்து விழிப்புணர்வு வகுப்பு

திருநெல்வேலி,ஜூலை 27: ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற வருபவர்களுக்கு விபத்து குறித்த விழிப்புணர்வு வகுப்பு திருநெல்வேலி  வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  நடைபெற்று வருகிறது.  இயற்கை மரணத்திற்கு அடுத்தபடி
Updated on
2 min read

திருநெல்வேலி,ஜூலை 27: ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற வருபவர்களுக்கு விபத்து குறித்த விழிப்புணர்வு வகுப்பு திருநெல்வேலி  வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  நடைபெற்று வருகிறது.

 இயற்கை மரணத்திற்கு அடுத்தபடியாக, சாலை விபத்துகளின் மூலம்தான் அதிகமான  உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. சரியான சாலைகள் இல்லாததால் விபத்துகள் அதிகமாக  ஏற்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன்புவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வளர்ந்த நாடுகளில் உள்ளதுபோல நான்குவழிச் சாலைகள் போடப்பட்டும், விபத்துகள்  குறையவில்லை. மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில்தான் சாலை விபத்துகள் மூலம் அதிக உயிர்ச்சேதம் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின்  மொத்த சாலை விபத்து உயிரிழப்பில் 14 சதவிகிதம், தமிழகத்தில்தான் ஏற்படுகிறது.

 போக்குவரத்து விதிமுறைகளை தெரியாமலும், மதிக்காமலும் இருப்பதே விபத்துகளுக்கு முதற்காரணம். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அவ்வப்போது  வாகன ஓட்டிகளிடமும், மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அது அவர்களை முழுமையாகச் சென்றடைவதில்லை.

 இந்நிலையில், விபத்துகளை குறைக்கும் ஒரு வழிமுறையாக, திருநெல்வேலி வட்டார  போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் பழகுநர் உரிமம் எடுக்க வருகிறவர்களுக்கு,  விபத்து குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்பில் ஒரு  நாளைக்கு 100 பேர் கலந்துகொள்கிறார்கள். தலா 50 பேர் பங்கேற்கும் வகையில் இரு வகுப்புகளாக இது நடத்தப்படுகிறது. போக்குவரத்து  விதிமுறைகள், போக்குவரத்து சிக்னல்கள், இன்சூரன்ஸ், ரயில்வே கிராஸிங் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக 30 நிமிடங்கள் இந்த வகுப்பு நடைபெறுகிறது.

 மோட்டார் வாகன ஆய்வாளர்களும், வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர்களும் இந்த வகுப்பில் பங்கேற்று ஆலோசனை வழங்குகின்றனர்.

போக்குவரத்து  சிக்னலை பற்றி தெரிந்து கொள்வதற்காக சுமார் 125 போக்குவரத்து சிக்னல்கள்  படமாக அங்கு டிஜிட்டல் போர்டுகளில் வைக்கப்பட்டுள்ளன.

 ஓட்டுநர் பழகுநர் உரிமம் எடுக்க வருகிறவர்கள் எழுத்துத் தேர்வை எழுதுவதற்கு  முன்பு இந்த வகுப்பு நடத்தப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக இந்த உரிமம் எடுக்க  வருகிறவர்கள், கண்டிப்பாக இந்த வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 திருநெல்வேலி போக்குவரத்து துணை ஆணையராக பொறுப்பேற்றுள்ள வி.பாலன்  உத்தரவின்பேரில், திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர்  பொன்.செந்தில்நாதன் கண்காணிப்பில் இந்த விழிப்புணர்வு வகுப்பு நடைபெறுகிறது.

 இந்த வகுப்பு மூலம் தங்களால் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாகத்  தெரிந்துகொள்ள முடிவதாக பங்கேற்பவர்கள் கூறுகின்றனர்.

 "நான்குவழிச் சாலையில் பெருகி வரும் சாலை விபத்துகளை குறைப்பதற்காக, இந்த  வகுப்பை நாங்களாக ஆலோசனை செய்து தொடங்கினோம். நாங்கள் எதிர்பார்த்தைவிட நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஒருவர் செய்யும் தவறினால்  மட்டுமே விபத்துகள் ஏற்படுவதில்லை என்பதைக் கருத்தில்கொண்டு, ஓட்டுநர் பழகுநர்  உரிமம் எடுக்க வருகிற அனைவரும் இந்த வகுப்பில் கண்டிப்பாக கலந்துகொள்ள  வேண்டும் என விதிமுறை வகுத்துள்ளோம். விரைவில் இந்த வகுப்பை திருநெல்வேலி  சரகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், பகுதி  அலுவலங்களிலும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த வகுப்பு மூலம் இன்னும்  அதிகமான தகவல்களை வழங்க ஆலோசனை செய்து வருகிறோம். மாநிலத்தில்  இதுபோன்ற வகுப்பு வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை' என்றார் திருநெல்வேலி  போக்குவரத்து துணை ஆணையர் வி.பாலன்.

 "இந்த வகுப்பினால் கடந்த ஒரு மாதமாக ஒட்டுநர் பழகுநர் உரிமம் எடுக்க வருகிறவர்கள், முழுமையாக போக்குவரத்து விதிமுறைகளைப் பற்றி தெரிந்துகொள்வதால்  அவர்களால் விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகின்றன. சிறு  விபத்துகள் தவிர்க்கப்பட்டால்கூட, அது எங்களுக்கு கிடைத்த வெற்றிதான்' என்கிறார் வட்டார போக்குவரத்து அலுவலர் பொன்.செந்தில்நாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com