திருநெல்வேலி,ஜூன் 29: சீன வாஸ்து பொருள்கள் மக்களிடம் அண்மைக்காலமாக பிரபலமடைந்து வருகின்றன.
சீனாவின் ஃபெங்சூயி வாஸ்து பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவுக்கு வந்திருந்தாலும், அண்மைக்காலமாக மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஒரு கட்டட அமைப்போடு இந்திய வாஸ்து நின்றுவிடும் நிலையில், ஃபெங்சூயி வாஸ்து முழுமையாக கட்டப்பட்ட கட்டங்களில் உள்ள கோளாறுகளை சில வாஸ்து பொருள்களைக் கொண்டு நீக்கலாம் என கூறுகிறது.
இதற்காக பல நூறு ஃபெங்சூயி வாஸ்து பொருள்கள் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. வீடு, வணிக கட்டடம், திருமண மண்டபம், திரையரங்கு, தொழிற்சாலை என அனைத்துவகை கட்டடங்களுக்கும் வாஸ்து பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவை மட்டுமன்றி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம் எனக் கூறி, ஃபெங்சூயி வாஸ்து பொருள்கள் விற்கப்படுகின்றன.
இவையனைத்தும் சீனாவில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுவதாக, அதன் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை வடமாநிலங்களில் மட்டும் பிரபலமாக இருந்த இந்த வாஸ்து, இப்போது தமிழகத்திலும் பிரபலமடைந்து வருவதாக ஒரு விற்பனையாளர் தெரிவிக்கிறார்.
ஃபெங்சூயி வாஸ்து பொருள்கள் அனைத்தும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், விலை குறைவாகவே உள்ளது.
மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்றார்போல, பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.50-ல் தொடங்கி ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
குறிப்பாக சிரிக்கும் புத்தர், உயிருள்ள மூங்கில், பணம்காய்ச்சி மரம், மூன்றுகால் பண தவளை, சீன டிராகன், சீன மணி (வின்ட்சம்) ஆகியவை அதிகமாக விற்பனையாகின்றன.
இப் பொருள்களை ஃபெங்சூயி வாஸ்து விதிமுறைப்படிதான் வீடுகளில் வைக்க வேண்டுமாம்.
இந்த விதிமுறைகளை அதற்குரிய ஆலோசகர்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால், ஃபெங்சூயி வாஸ்து பயிலுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஏற்கெனவே சீன செல்போன், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள், குழந்தைகள் விளையாட்டுப் பொருள்கள், அழகுசாதன பொருள்கள், சீன பட்டு என சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், சீன வாஸ்து பொருள்களின் விற்பனையும் அதிகரித்து வருவது சமுதாய ஆர்வலர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.