திருநெல்வேலி,மே 19: திருநெல்வேலி புறநகர்ப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் முறையாக இயக்கப்படாததால், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகரைச் சுற்றி அதிகமான கிராமங்கள் உள்ளன. இக் கிராம மக்கள் தங்களது சிறு தேவைகளுக்கு கூட மாநகருக்குத்தான் வர வேண்டியுள்ளது.
விவசாயிகள், பாளையங்கோட்டை, நகரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு நகர பஸ்கள் மூலமே பெரும்பாலும் விளை பொருள்களை கொண்டு வருகின்றனர். இதேபோல இங்கிருந்து விவசாயம் சார்ந்த பொருள்களை, நகர பஸ்களிலே ஊருக்கு கொண்டு செல்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களும் பஸ்கள் மூலமே வந்து செல்கின்றனர்.
அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் மட்டும் 134 நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பான்மையானவை கிராமப்புறங்களுக்கே இயக்கப்படுகின்றன. ஆனால் அண்மைக்காலமாக நகர பஸ்கள் கிராமப்புறங்களுக்கு முறையாக இயக்கப்படுவதில்லை என்று புகார் கூறப்படுகிறது.
இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, வல்லநாடு, தாழையூத்து, மானூர்,ஆலங்குளம்,பேட்டை,கருங்குளம்,சேரன்மகாதேவி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் பஸ்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுவதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அடக்கம். நெல்லையைப் பொறுத்தவரை அரசு பஸ்களுக்கு இணையாக, தனியார் பஸ்களும் இயங்குகின்றன. அரசு பஸ்கள் சரியாக இயக்கப்படாததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
குறிப்பாக, அரசு பஸ் டிரைவர்கள் எண்ணிக்கைக் குறைவு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதேபோல விபத்து வழக்கு விசாரணைக்கு நடத்துநர்கள் ஆஜராக செல்வது, பஸ் பராமரிப்பு ஊழியர்கள் குறைவு, ஊழியர்கள் கோடை விடுமுறையில் இருப்பது என பல காரணங்கள் கூறப்படுகின்றன. இக் காரணங்களால் மட்டும் புதன்கிழமை 4 பஸ்கள் இயக்கப்படாமல்
பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தனவாம். இவை ஆலங்குளம்,மானூர்,சுப்பிரமணியபுரம் பகுதிக்கு
செல்லும் பஸ் களாகும்.
மேலும் பஸ் நிலையத்தில் இருக்கும் பயணிகள் கூட்டத்தை பொருத்து, பஸ்கள் வழக்கமாக செல்லும் வழித்தடத்தில் இருந்து வேறு வழித்தடத்துக்கு மாற்றிவிடப்படுவதால், அந்த பஸ்ûஸ எதிர்பார்த்து நிற்கும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல திருவிழா,முகூர்த்த காலங்களில் கிராமப்புறங்களுக்குச் செல்லும் பஸ்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டு, பயணிகள் கூட்டம் இருக்கும் ஊருக்கு இயக்குவது அடிக்கடி நடக்கிறது.
இரவு நேரத்தில் பஸ்கள் ரத்து செய்யப்படுவதால், கிராமப்புற பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அண்மைக்காலமாக சில தனியார் பஸ்கள் கூட்டம் இருந்தால் மட்டும் கிராமப்புறங்களுக்கு செல்வதும், கூட்டம் இல்லாவிட்டால் மாநகரத்துக்குள் வேறு வழித்தடத்தில் இயங்குவதாக கிராமப்புற மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பஸ்களை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பயணிகள் ஆதங்கப்படுகின்றனர்.
அரசு போக்குவரத்துக் கழகமும், தனியார் பஸ் நிறுவனங்களும் கிராம மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு பஸ்களை இயக்க முன் வர வேண்டும்.
விதிமுறைகளை மீறி இயங்கும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் தயக்கம் காட்டக்கூடாது என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி பொது மேலாளர் சு. முருகன் கூறியதாவது: பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்றாற்போல, பஸ்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டு வருகிறது.
கோடைகாலம் என்பதால் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. அதேவேளையில் போக்குவரத்துக் கழக ஊழியர்களும் அதிகமான பேர் கோடை விடுமுறையில் உள்ளனர். இதன் காரணமாக சில கிராமங்களுக்கு சில வேளைகளில் பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும் பஸ் நிலையங்களில் பயணிகளின் கூட்டத்தை பொருத்து சில பஸ்கள் வழக்கமான வழித்தடத்தில் இருந்து மாற்றி இயக்கப்படுவதால், கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயங்குவது தடைப்படுகிறது.
இந் நிலைமை கோடைகாலம் முடிந்ததும் சீராகிவிடும். டிரைவர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டு வருகிறது என்றார் முருகன்.
உரிமம் ரத்து...!
திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர் பொன். செந்தில்நாதன் கூறியதாவது:
இது போன்ற புகார்கள் மக்களிடமிருந்து வருகின்றன. புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்து, அபராதம் விதித்து வருகிறோம். மேலும் தனியார் பஸ் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறோம். தொடர்ச்சியாக இதுபோன்ற புகாரில் 3 முறை சிக்கும் பஸ்களின் வழித்தட உரிமம் ரத்து செய்யப்படும். மக்கள், தங்கள் பகுதிக்கு சரியாக பஸ்கள் இயக்கப்படவில்லையென்றால், எங்களிடம் புகார் செய்யலாம் என்றார் செந்தில்நாதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.