நலிவுற்று வரும் தையல் தொழில்!
ஆலங்குளம், நவ.10: தையல் கலையை கற்றுக்கொள்வதில், ஆண்களிடம் ஆர்வம் குறைந்து வருவதால் தையல் கலைஞர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. தையல் தொழிலுக்கும், அதில் ஈடுபடும் கலைஞர்களுக்


ஆலங்குளம், நவ.10: தையல் கலையை கற்றுக்கொள்வதில், ஆண்களிடம் ஆர்வம் குறைந்து வருவதால் தையல் கலைஞர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
தையல் தொழிலுக்கும், அதில் ஈடுபடும் கலைஞர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூகத்தில் தனி அந்தஸ்து இருந்து வந்தது.
இவர்களின் வளமான வாழ்வை துண்டாடும் கத்தரிக்கோலாக ஆயத்த ஆடைகள் உருவெடுத்த பின்பு தையல்கலைஞர்களின் மவுசு குறையத் தொடங்கியது.
தையல் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் பலர் பெரிய அளவில் பொருளாதார மேம்பாடு அடையாமல் குடும்பத்தை நடத்தவே மிகவும் திணறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தேவைகளை பூர்த்தி செய்ய போதிய வருவாய் கிடைக்காததால், இத் தொழிலில் இருந்து விலகி மாற்றுத் தொழிலுக்குச் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இவர்கள், விழாக்காலங்களில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தையல் தொழிலை துணைத் தொழிலாக மாற்றிவிட்டனர்.
நலிவுக்கு காரணம்: முன்பெல்லாம் ஒரு தையல்கலைஞர் இருந்தால் அவருடன் காஜா, பட்டன் வைக்க, கை தையல் போட என சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். அவர்கள் கிழிந்த துணிகளைத் தைக்க பழகி, படிப்படியாக புது ஆடைகளைத் தைக்க கற்றுக்கொள்வர்.
இதனால் சுமார் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் வரை சம்பளம் ஏதும் இன்றி ஒரே தையல்காரரிடம் தொழில் கற்று, அவர்கள் முழுமையான தையல்காரராக வெளியில் செல்வர். ஆனால், தற்போது காஜா,பட்டன் வைக்க ஆட்கள் கிடையாது. தொழில் கற்றுக்கொள்ள ஆட்கள் இல்லை. அப்படியே ஒரு சிலர் வந்தாலும் கற்றுக்கொள்ளவே சம்பளம் எதிர்பார்க்கின்றனர்.
ஏனென்றால், தற்போது சாதாரண கூலியாள்களுக்கு கூட தினந்தோறும் ரூ. 200 சம்பளம் கிடைக்கும் நிலை வந்துவிட்டது. இதனால் தையல் தொழிலை கற்றுக்கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தையல்கலைஞர்களும் தங்களின் சந்ததியினருக்கு இந்தத் தொழிலைக் கற்றுக் கொடுக்க தயக்கம் காட்டுகிறார்கள்.
குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான உணவு, கல்வி, மருத்துவச் செலவுகள் என்று இவை எல்லாவற்றையும் கடந்து பொருளாதார மேன்மை தருவதாக தையல் தொழில் கை கொடுப்பதில்லை என்று இன்றைய இளைஞர்கள் கருதுகிறார்கள்.
இதனால் இன்னும் 10 ஆண்டுகளில் புதிதாக தொழில் தொடங்க தையல்கலைஞர்கள் இருக்க மாட்டார்கள். இதேநிலை ஆயத்தஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஏற்படும் வாய்ப்புள்ளது.
இது குறித்து நல்லூரைச் சேர்ந்த தையல்கலைஞர் சேகர் கூறியதாவது:
காஜா, பட்டன் வைக்க பழகும் சிறுவர்கள் வந்தால்தான் வருங்காலங்களில் புதிய தலைமுறை தையல்கலைஞர்கள் உருவாகுவார்கள். ஒரு சில இடங்களில் பெண்கள் ஆர்வமுடன் தையல் கற்றாலும், இந்த சமூகத்தில் ஏற்படும் தேவைகளை முழுமையாக அவர்களால் நிறைவேற்ற முடியாது என்றார்.
தமிழ்நாடு தையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஆலங்குளம் நகரத் தலைவர் எஸ்.எஸ். அருணா கூறியதாவது:
தையல்தொழில் மீட்சி பெற வேண்டுமானால், தற்போது உள்ள தையல் கலைஞர்களுக்கு அரசு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.
அமைப்பு சாரா தொழிலில் உள்ள எங்களுக்கு, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்.
அரசு தொழிற்பயிற்சி கல்லூரிகளில் தையல்கலையை பாடமாக சேர்த்து, உதவித்தொகையுடன் கூடிய படிப்பை ஏற்படுத்தி, இளம் தலைமுறையினர் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத பட்சத்தில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தையல் தொழிலை செய்வதற்குத் தேவையான ஆண்கள் இருக்க மாட்டார்கள். அதோடு இருக்கும் ஒன்றிரண்டு தையல் கலைஞர்களுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுவிடும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...