‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆலங்குளத்தில் ​ கருவை மரக் காடாகிவரும் தொட்டியான்குளம்

ஆலங்குளம், அக். 7: திருநெல்வேலி- தென்காசி பிரதான சாலையில் அமைந்துள்ள ஆலங்குளத்தில், அதிக பரப்பளவு கொண்ட குளம் இருந்தும், முறையாக தூர்வாராதது, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாதது போன்ற காரணங்களால், குளத்தில்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:14 pm

வை. இராமச்சந்திரன்

ஆலங்குளம், அக். 7: திருநெல்வேலி- தென்காசி பிரதான சாலையில் அமைந்துள்ள ஆலங்குளத்தில், அதிக பரப்பளவு கொண்ட குளம் இருந்தும், முறையாக தூர்வாராதது, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாதது போன்ற காரணங்களால், குளத்தில் மழைநீரை அதிகளவில் சேமிக்க முடியாத சூழ்நிலை தொடர்கிறது.

இதனால் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

ஆலங்குளத்தில் அமைந்துள்ள தொட்டியான்குளம் 88.38 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனால் குளத்தின் மூலம் பாசன வசதி பெறக்கூடிய நிலங்களோ 68.39 ஏக்கர்தான்.

இருப்பினும் விவசாயம் மட்டுமன்றி பிற தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் நிலத்தடி நீர்மட்டம் இருக்க வேண்டுமானால், தொட்டியான்குளத்தில் நீர் இருப்பு அதிகமாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இது குறித்து, ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மட்டுமன்றி பொதுமக்களும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

காரணம், குடிநீருக்காக ஆற்றுத்தண்ணீர் இணைப்பு மூலம் வீட்டிற்கு தண்ணீர் கிடைத்து விடுவதால் பொதுமக்களும் இது குறித்து அதிக சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை.

ஆலங்குளம் பகுதியில், முன்பெல்லாம் சுமார் 30 அடியில் ஆழ்குழாய் கிணறு அமைத்தாலே தண்ணீர் கிடைத்தது. தற்போது சில இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் போது 350 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதும், சில இடங்களில் 800 அடிவரை தண்ணீர் இல்லாமல் கவலை தரும் விஷயம்.

குளம் இருக்கும் பகுதியில் உள்ள கிணறுகளில் கூட, குறைந்தளவு விவசாயம் செய்யக் கூட தேவையான அளவிற்கு தண்ணீர் இல்லை. குடிநீருக்காக, ஆற்றுத்தண்ணீர் கிடைக்கும் ஒரே காரணத்தால் மட்டுமே குடிநீர் பிரச்னை வெளிப்படையாகத் தெரியவில்லை.

இல்லையெனில் ஆலங்குளம் பகுதியில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும்.

இது குறித்து விவசாயி வி. கதிரவன் கூறியதாவது:

குளத்தை தூர்வார வேண்டுமானால் அரசு உடனே நிதி ஒதுக்கி ஆக வேண்டும் என்பதில்லை.

மத்திய அரசின் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளைக் கொண்டு தூர்வாரலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு அனுமதியுடன், ஓடு தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று குளத்து மணலை வெட்டி அள்ளிச்சென்றது. அது போன்று தனியார் ஓடு தயாரிக்கும் நிறுவனங்கள், செங்கற்சூளை தொழில் செய்வோர், விவசாயிகள் கரம்பை மண் அள்ள அனுமதி போன்றவை செய்தாலே இந்த குளம் முழுமையாக தூர்வாரப்பட்டுவிடும்.

குளத்து மணலை அள்ள அனுமதி அளிக்கும் போது, 5 அடி ஆழம் வரை எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். மேலும் வனத்துறையினர், நீர்க் கருவைகளை தரைக்கு மேல் வெட்டுவதை விட்டுவிட்டு, வேரோடு முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.

இதன் மூலம் நீர் நிலைக்காக தூர்வாரப்படும் பகுதிகள் போக எஞ்சிய பல ஏக்கர் நிலத்தை அரசின் நலத்திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார் அவர்.

இது குறித்து வழக்கறிஞர் டி. நெல்சன் கூறியது:

குளத்தில் உள்ள கருவை மரங்களை அகற்றி, முழுமையாக தூர்வாறுவதோடு, குளத்தின் மையப்பகுதியில், சுமார் ஆயிரம் சதுர அடிக்கும் மேலாக, 10 அடிக்கும் அதிகமான ஆழத்தில் பெரிய குழியாக அமைக்க வேண்டும்.

இதன் மூலம் மழைக்காலங்கள் மட்டுமன்றி,சிறிது வறட்சியான காலத்தில் கூட

இத்தகைய பகுதிகளில் தண்ணீர் தேங்கி சேமிக்கப்படும் போது,ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி

நீர்மட்டம் பராமரிக்கப்படும் என்றார் அவர்.

தூர்வாரப்படுமா?

முள்புதர்கள் நிறைந்தும், சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ள தொட்டியான் குளம், தூர்வாரப்பட்டு அரை நூற்றாண்டுக்கும் மேல் இருக்கும்.

வனத்துறையால் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நீர்க் கருவை மரக்கன்றுகள் நடப்பட்டன. இதுவும் வளர்ந்து சில முறை வெட்டப்பட்டு அரசு கஜானாவுக்கு வருமானமாக சென்றது.

காலம் செல்லச்செல்ல, கால்வாய் மற்றும் ஓடையை விட குளம் மேடாகிக் கொண்டே வருகிறது. குளமே காணாமல் போகும் நிலை ஏற்படலாம்.

அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்கின்றனர் விவசாயிகள்.

தற்போதும் நீர்க்கருவை மரங்கள், வேலிக் கருவை மரங்கள் போன்றவை குளத்தை ஆக்கிரமித்துள்ளன.

இதனால் இப்பகுதியில் சில சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன.

இதைத் தடுக்கவும், குளத்தை தூர்வாரவும் ஏதுவாக, வனத்துறையினர் உடனே கருவை மரங்களை வெட்ட வேண்டும் என்கின்றனர் சமூகநல ஆர்வலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.