திருநெல்வேலி, அக். 11: சைவ வேளாளர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து சைவ வேளாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருநெல்வேலி நகரத்தில் மாவட்ட அனைத்து சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் நாஞ்சில் எஸ். மதன் தலைமை வகித்தார். மாவட்ட சைவ வேளாளர் சங்கத் தலைவர் லட்சுமணப் பிள்ளை முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இயற்றிய மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளைக்கு திருநெல்வேலியில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு பெற சைவ வேளாளார்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், வீரகோடி வெள்ளாளர், துளுவ வெள்ளாளர், இல்லத்துபிள்ளைமார் போன்ற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வேளாளர்களை எல்லாம் இசை வேளாளர்கள் போல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
முற்படுத்தப்பட்ட வகுப்பினரான சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ செட்டியார், கார்கார்த்தார், ஓதுவார் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திலும் 10 சதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாரபட்சமின்றி கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்.
பேட்டை கூட்டுறவு ஆலையை உடனே திறக்க வேண்டும். நெல்லை- தென்காசி அகல ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும்.
தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆட்டோ, வேன் டிரைவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்ற பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.