நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பணியிடம் நீக்கம்

திருநெல்வேலி,அக்.21: திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பணியிடம் நீக்கப்பட்டது. தற்போது அந்தப் பணிக்குரிய பொறுப்புகளை, சட்டம் மற்றும் ஒழுங்கு  துணை ஆணையர் கவனித்து வருகிறார்.  இதனால் குற்ற வ
Updated on
2 min read

திருநெல்வேலி,அக்.21: திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பணியிடம் நீக்கப்பட்டது. தற்போது அந்தப் பணிக்குரிய பொறுப்புகளை, சட்டம் மற்றும் ஒழுங்கு  துணை ஆணையர் கவனித்து வருகிறார்.

 இதனால் குற்ற வழக்குகளின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 திருநெல்வேலி மாநகராட்சி உருவாக்கம், மக்கள்தொகை பெருக்கம், மாநகர்  விரிவாக்கம் ஆகியவற்றின் காரணமாக திருநெல்வேலி மாநகர காவல்துறை 1997ஆம்  ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்போது மாநகர காவல்துறை 8 உதவி ஆணையர்கள்,  18 ஆய்வாளர்கள், 1,200 காவலர்களுடன் இயங்கி வருகிறது.

 இவர்களை வழிநடத்த ஐ.ஜி. ரேங்கில் மாநகர காவல் ஆணையரும், காவல்  கண்காணிப்பாளர் ரேங்கில் இரு காவல் துணை ஆணையர்களும் செயல்பட்டு வந்தனர்.

 இம் மாநகரில் சட்டம், ஒழுங்கு பிரச்னை பெரிய அளவில் ஏற்படவில்லை.  இருப்பினும் பண மோசடி, நில மோசடி, வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி, கொள்ளை ஆகியவை தொடர்கின்றன. மாநகர காவல்துறையானது, குற்றவாளிகளைக்  கண்டறிந்து கைது செய்து வருகின்றபோதிலும், சற்று காலதாமதம் ஏற்படுவதாகவும்  கருத்து நிலவுகிறது. மாநகரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகளைக் காட்டிலும்,திருட்டு, வழிப்பறி,கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

 உதாரணமாக 2009 ஆம் ஆண்டு மட்டும் 196 பெரிய திருட்டுச் சம்பவங்களைக் கூறலாம். திருட்டு, வழிப்பறிக்கு அடுத்ததாக, மாநகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து  நெரிசல் பிரச்னை தீராத தலைவலியாக உருவெடுத்து வருகிறது.

 மாநிலத்தில் 6-வது பெரிய நகரமாக திருநெல்வேலி மாநகரம் உருவாகி வரும் வேளையில், போக்குவரத்து நெரிசல் பிரச்னை கறும்புள்ளியாக உள்ளது.

வண்ணார்பேட்டையில் புதிய பாலம் திறக்கப்பட்டும், எதிர்பார்த்த அளவு போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

 இந்நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில் தமிழக காவல்துறை மாநகர குற்றம்  மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் பணியிடத்தை அரசு நீக்கியுள்ளது. அந்தப்  பணியிடம் தமிழக சி.பி.சி.ஐ.டி. சைபர் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுளட்டுள்ளது.

 குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக கடைசியாக இருந்த நிஜாமுதீன்,  தமிழக அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார். குற்றப்பிரிவு துணை ஆணையர் பணியிடத்தை நீக்குவதற்கு, சில மாதங்களுக்கு முன்பே அரசு உத்தரவிட்டது. இதன்  காரணமாக தற்போது குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு பணியையும், சட்டம்  ஒழுங்கு துணை ஆணையராக இருக்கும் அவினாஷ்குமார் கவனித்து வருகிறார்.

 ஒரே துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து என  அனைத்துப் பணிகளையும் சேர்த்து கவனித்து வருவதால், குற்ற வழக்குகளில் துப்பு  துலக்குவதிலும், விசாரணையை துரிதப்படுத்துவதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக குற்றப்பிரிவு போலீஸôர் தெரிவிக்கின்றனர்.

 மேலும், வழக்கின் விசாரணையின்போது உயர் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். போலீஸôர் தங்களுக்கு  ஏற்படும் இடர்ப்பாடுகளைக்கூட கூற முடியாத அளவுக்கு துணை ஆணையரின்  பணிச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 மேலும் சில வழக்குகளில் பல்வேறு குறுக்கீடுகளின் காரணமாக விசாரணையைத்  துரிதப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலைமைதான் போக்குவரத்துப்  பிரிவிலும் காணப்படுகிறது. கட்டுப்பாடும், கண்காணிப்பும் குறைந்து இருப்பதாக போலீஸôர் புகார் கூறுகின்றனர்.

 இப் பிரச்னைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க, குற்றப்பிரிவு துணை  ஆணையர் பணியிடத்தை மீண்டும் உருவாக்க வேண்டும். மாநகர காவல்துறை இப்  பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com