திருச்செந்தூர், டிச. 8: திருச்செந்தூர் கோயில் வளாகங்களில் பக்தர்களிடம் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க சிறு வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால் கோயில் வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
திருவிழா நாள்களில் உள்ளுர், வெளியூர்களிலிருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்களிடம் நகை, பணம் திருடுவது, நூதன முறையில் மோசடி செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
மேலும் இப்போது ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகளவில் உள்ளதால், அந்த நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளன. திருவிழாக் காலங்களில் போலீஸôôருடன் ஊர்க்காவல்படை மற்றும் தொண்டர்படையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
ஆனாலும் திருக்கோயில் வளாகம் மற்றும் கடற்கரையில் குளிக்கவரும் பக்தர்களிடம் நகை மற்றும் பணம் மோசடி நடப்பதும், கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் செல்போனை திருடிச் செல்லும் சம்பவங்களும் பக்தர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.
வியாபாரிகளுக்கு அடையாள அட்டை: திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் கடலை, கிழங்கு, காபி, டீ, வடை, சிப்பி விற்பவர்கள் என மொத்தம் 300-க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் கோயிலுக்கு வரும் பக்தர்களை நம்பி வியாபாரம் நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் திருக்கோயில் நிர்வாகத்திடம் கட்டண அனுமதிச்சீட்டு பெற்றுக் கொண்டுதான் வளாகத்தில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் திருச்செந்தூர் கோயில் வளாகம், கடற்கரைப் பகுதிகளில் தொடர்ச்சியாக 5 திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறியும் வகையில் தொடர்ச்சியாக 4 நாள்கள் கோயில் வளாகத்தில் சிறு வியாபாரிகள், தங்கள் வியாபாரத்தை தொடர போலீஸôர் அனுமதிக்கவில்லை.
குற்றச்செயல் புரிபவர்களைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படியாக சிறு வியாபாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
திருவிழாக் காலங்கள் மற்றும் விடுமுறை நாள்களில் வியாபாரிகள் போல திருடர்கள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக வியாபாரிகள் அனைவருக்கும் காவல்துறை சார்பில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி முடிவடைந்து அடையாள அட்டை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த அடையாள அட்டையில் வியாபாரியின் பெயர், புகைப்படம், வீட்டு முகவரி மற்றும் வியாபாரம் குறித்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்தில் உள்ள வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது தமிழகத்திலே இதுதான் முதலாவதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.